இன்போசிஸ் ஐடி நிறுவன மென்பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால், குற்றவாளியை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது. மக்கள் கூட்டம் நிறைந்த ரயில் நிலையத்தில் கொலை செய்துவிட்டு குற்றவாளி எந்த தடையும் இல்லாமல் தப்பிச் சென்றுள்ளான். கொலையாளி பச்சை நிற டிசர்ட் அணிந்திருந்ததாக கொலையை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சுவாதி இன்று காலை வழக்கம் போல மகேந்திராசிட்டியில் உள்ள தனது அலுவலகத்திற்கு கிளம்பியுள்ளார். அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். இன்று காலை 6 மணியளவில், இவர் தனது வீட்டில் இருந்து மோட்டார் பைக்கில் சுவாதியை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டு வீடு திரும்பினார்.
சந்தான கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு போய் சேர்ந்த சில நொடிகளில், சுவாதி படுகொலை செய்யப்பட்டது குறித்த தகவல் அவருக்கு தெரியவந்தது. அலறியடித்துக்கொண்டு ரயில் நிலையத்திற்கு அவர் வந்தார். காலை 6.30 மணியளவில் படுகொலை நடந்தும், 8.30 மணி வரை சுவாதியின் உடல் ரயில் நிலைய பிளாட்பாரத்திலேயே துணியால் மூடி வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளில் காவல்துறை மெத்தனம் காட்டியதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
அவ்வழியாக போவோர் வருவோரெல்லாம், என் மகளை கண்காட்சி போல பார்த்துச் செல்கிறார்களே என்று சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் கதறி அழுதார். படுகொலை சம்பவம் குறித்து ரயில் நிலையத்தில் கடை நடத்தி வரும் நபர் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, தான் உட்பட அனைத்து பயணிகளும் சம்பவத்தை நேரில் பார்த்தோம். ஆனால் என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் கொலையை செய்துவிட்டு குற்றவாளி தப்பியோடிவிட்டான் என்று தெரிவித்தார்.
கொலைக் குற்றவாளி பச்சை நிற டிஷர்ட்டும், கருப்பு நிற பேண்டும் அணிந்திருந்ததாகவும், அவன் கையில் டிராவல் பேக் ஒன்றை எடுத்து வந்ததாகவும், அதில் இருந்துதான் கத்தியை எடுத்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். குற்றவாளி குறித்து அடையாளம் காண, சுவாதியின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் நிலையில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டிருந்தால் குற்றவாளியை எளிதில் பிடித்திருக்கலாம். சுவாதியை படுகொலை செய்த பச்சை டிசர்ட் அணிந்த குற்றவாளியை இப்போது போலீசார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment