ஆளுநர் உரை என்பது அம்மா கால அட்டவணை என்றார் ஸ்டாலின். இதற்கு பதிலடி தரும் வகையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் உரை என்பது அந்த உரையை யார் ஆற்றுகிறார்களோ, அவர்களுடைய உரை அல்ல. இது அரசாங்கத்தினுடைய கொள்கை விளக்க ஏடு என்று கருணாநிதியே சொல்லியுள்ளார். எனவே, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இதில் எந்தவித குழப்பமும் வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் கடந்த 16ம் தேதி ஆளுநர் ரோசய்யா உரையாற்றினார். உரை முடிந்த உடன் கருத்து கூறிய எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், இது அம்மா கால அட்டவணை என்றார். இதற்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் பதில் கொடுத்தனர். அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவோ, அம்மா கால அட்டவணையில் ராகுகாலம் திமுக சந்திராஸ்டமம் காங்கிரஸ் என்றெல்லாம் தெரிவித்தார். சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசினார். அப்போது அம்மா கால அட்டவணை கமெண்டிற்கு பதிலளித்தார்.
மக்கள் சக்தியை மட்டும் மூலதனமாகக் கொண்ட, இயக்கங்கள் மட்டுமே இன்று உருக்குலையாமல், துருப்பிடிக்காமல் தேய்ந்து விடாமல், மாய்ந்து விடாமல், அசைக்க ஒண்ணாத கோட்டைக் கொத்தளமாக புத்தொளி வீசுகிறது என்றார் பேரறிஞர் அண்ணா. அவரது கூற்றுப்படி, கடந்த ஐந்து ஆண்டு காலமாக மக்கள் சக்தியை மூலதனமாகக் கொண்டு நாங்கள் ஆட்சி பொறுப்பிலே இருந்தோம். அதனால் தான், மக்கள் என்னை தொடர்ந்து 2வது முறையாக முதலமைச்சராக ஆக்கி இருக்கிறார்கள். தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய எங்களை அனுமதித்து இருக்கிறார்கள். அதற்காக தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.
நல்ல ஆட்சியின் இலக்கணம் கடந்த ஜனவரி 23ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு, நான் பதிலுரை அளித்த போது நல்ல ஆட்சியின் இலக்கணம் பற்றி அண்ணா சொன்னதை நினைவு கூர்ந்தேன். நல்ல விளக்குக்கு வெளிச்சம் எப்படியோ, நல்ல வயலுக்கு விளைச்சல் எப்படியோ, அப்படித்தான் நல்ல மக்களுக்கு, நிம்மதி வேண்டும் என்றார் பேரறிஞர் அண்ணா.
மக்கள் நிம்மதி மக்கள் நிம்மதியுடன் வாழ வகை செய்யும் விதமாக பல்வேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருப்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் உணர்ந்துள்ளார்கள் என்று நான் அப்போது தெரிவித்தேன். மக்கள் நிம்மதி பெறும் வகையிலான திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வந்ததால் தான், தமிழக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தி இருக்கிறார்கள்.
மு.க.ஸ்டாலினுக்கு பதில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த ஆளுநர் உரையைப் பொறுத்த வரையில், இது அரசின் உரை தான் என்பது வெளிப்படுகிறது என்று ஆளுநர் உரை முடிந்தவுடன் தனது முதல் கருத்தாக தெரிவித்தார்.
அரசின் உரைதான் ஆளுநர் உரை என்பது அரசின் உரை தான். அரசின் கொள்கைகளை எடுத்துக் கூறும் விளக்க உரை தான். இது தான் ஆளுநர் உரையின் இலக்கணம் என்பதை முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இதே சட்டமன்றத்தில் கூறி இருக்கிறார் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தெரிந்து கொள்வது நல்லது.
குழப்பம் வேண்டாம் 1997ம் ஆண்டு ஆளுநர் பேருரைக்கு நன்றி கூறும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய போது, ஆளுநர் உரை என்பது அந்த உரையை யார் ஆற்றுகிறார்களோ, அவர்களுடைய உரை அல்ல. இது அரசாங்கத்தினுடைய கொள்கை விளக்க ஏடு என்று கருணாநிதியே சொல்லியுள்ளார். எனவே, எதிர்க்கட்சித் தலைவருக்கு இதில் எந்தவித குழப்பமும் வேண்டியதில்லை.
கொள்கை அறிவிப்புகள் தி.மு.க தலைவர் உறுப்பினர் கருணாநிதி, "கொள்கைக் குறிப்புகள், எதுவும் இல்லாத, வெற்றறிக்கை" என்று கூறியிருக்கிறார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர், இந்த அரசு என்னவெல்லாம் ஆசைப்படுகிறதோ, அதை எல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவற்றையெல்லாம் எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து எந்த விவரமும், எந்தவித விளக்கமும் அதில் இடம் பெற்றிருக்கவில்லை" என்று சொல்லியுள்ளார்.
பதில் கொடுத்த ஜெயலலிதா. ஆளுநர் உரையில் கொள்கை அறிவிப்புகள் இருக்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்று சட்டசபையில் பேசினார் ஜெயலலிதா. ஸ்டாலின் அம்மா கால அட்டவணை என்ற கமெண்டுக்கு பதில் கொடுத்ததோடு, கருணாநிதியின் அறிக்கைக்கும் பதில் அளித்து இருவரின் கருத்துக்களும் வேறு வேறாக இருக்கிறதே என்று சட்டசபையில் எடுத்துக்கூறினார் ஜெயலலிதா.
No comments:
Post a Comment