Latest News

கருணாநிதி குறித்து ஜாதி ரீதியான விமர்சனம்: மன்னிப்பு கேட்டார் வைகோ !


கருணாநிதி குறித்து பேசியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன். அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கின்றேன். என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று 6.4.2016 ஆம் நாளன்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விளக்கம் அளித்தேன்.

அக்கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும், சில மாவட்டச் செயலாளர்களும் அக்கட்சித் தலைமை சட்டமன்றத் தேர்தல் குறித்து மார்ச் 23 ஆம் தேதியன்று எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைமையைக் கடுமையாக விமர்சித்து நேற்றைய தினம் பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கூறிய கருத்துகளுக்குப் பதில் சொல்லும் விதத்தில் சில விளக்கங்கள் அளித்தேன். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினரை தலைமைக்கு எதிராக அறிக்கை விடச் செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து, வலை வீசுகிறார்கள்; அதற்குச் சாட்சியமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தேமுதிக நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் முகமது அலி என்பவரை அக்கட்சித் தலைமைக்கு எதிராக அழைத்து வந்தால் அவருக்கு 3 கோடி ரூபாயும், அழைத்து வருபவருக்கு 50 லட்சம் ரூபாயும் தருவதாக, கோல்டன் கான் என்ற இஸ்லாமிய நண்பரிடம், தேனியைச் சேர்ந்த நஜ்முதீன் பேசி இருக்கிறார் என்ற தகவலைச் சொன்னேன். பணம் வாங்கிக் கொண்டு கட்சி மாறுவது இழிவானது என்று கூறியபோது, இது உலகத்தின் ஆதித்தொழிலைப் போன்றது என்று கூறினேன். ஆனால், அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களைக் குறித்தோ, அவரது குடும்பத்தினர் குறித்தோ, மறைமுகமாக இப்படிச் சொல்ல வேண்டும் என்று இம்மி அளவும் என் மனதில் எண்ணம் இல்லை என்பதை, நான் வணங்கும் தெய்வமான என் அன்னை மாரியம்மாள் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். ஆனால் அதன்பின் நாதஸ்வரம் வாசிக்கும் கலை அவருக்குத் தெரியும் என்று கூறியது, தவறாகப் பொருள் கொள்ளும்படி ஆகி விட்டது. அது மிகப்பெரிய தவறுதான். அண்ணன் கலைஞர் அவர்களைச் சாதியைக் குறித்து நான் இப்படிச் சொன்னதாகப் பழிப்பதற்கும் நான் ஆளாகி விட்டதை எண்ணி வேதனைப்படுகிறேன். நான் சாதிய உணர்வுகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவன். அதை அண்ணன் கலைஞர் அவர்களே அறிவார்கள். அண்ணன் கலைஞர் அவர்களை 30 ஆண்டுகளாக என் நெஞ்சில் வைத்துப் போற்றியவன் நான். அவர் மீது துரும்பு படுவதற்கும் சகிக்காதவனாக, அவருக்கு ஒரு கேடு என்றால் அதைத் தடுக்க என் உயிரையும் தத்தம் செய்யச் சித்தமாக இருந்தவன் நான். அதனால்தான், 1993 அக்டோபர் 3 இல் என் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டபோது, என் உயிர் பிரியும் வரை உங்களுக்கு நான் கும்பகர்ணனாகவே இருப்பேன் என்று அறிக்கை விட்டேன். ஆனால், உலகின் ஆதித் தொழில் என்று கலைஞர் குடும்பத்தைக் குறிப்பிட்டு நான் கூறியதாகக் கருதுவதற்கு ஒரு இடம் ஏற்பட்டு விட்டதே என்பதை நினைக்கும்போது என் மேனி முழுவதும் நடுக்கமுற்றது என்பதை என் அருகில் இருந்தவர்கள் அறிவார்கள். இப்படி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன். அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கின்றேன். அண்ணன் கருணாநிதி அவர்கள் தாயுள்ளத்தோடு என் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.