சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் 24 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் கருத்தை கேட்டு தமிழக அரசு இன்று கடிதம் அனுப்பியுள்ளது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்கு தண்டனை கைதிகளாக இருந்தனர். நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளனர்.
இந்நிலையில் பேரறிவாளன் உட்பட 3 தமிழரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதனைத் தொடர்ந்து ராஜிவ் வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ள 7 தமிழரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. ஆனால் மத்திய அரசு இதற்கு முட்டுக்கட்டை போட்டு உச்சநீதிமன்றத்துக்குப் போனது. இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் 2-ந் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் ராஜிவ் வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய இந்திய குற்றவியல் சட்டத்தின் 432-வது பிரிவின் கீழ் மத்திய அரசு "ஒப்புதல்" பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் மாநில அரசே 7 பேரையும் விடுவிப்பதற்கு எந்த முட்டுக்கட்டையும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனால் தமிழக அரசு 7 பேரையும் தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யலாம் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலர், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 7 தமிழரையும் சிறையில் இருந்து விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இவர்கள் 7 பேரும் 24 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்; ஆகையால் இவர்களை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசின் இந்த நடவடிக்கை விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது.
No comments:
Post a Comment