ஏர்செல் மேக்சிஸ் மற்றும் 2ஜி முறைகேடு வழக்குகளில் விசாரணை நியாயப்படி நடைபெறுவதாகவும், யாராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, லோக்சபாவில் இன்று தெரிவித்தார். இவ்விரு விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க அதிமுக உறுப்பினர்கள் இரு அவைகளிலும் நேற்று முதல் கோரிக்கைவிடுத்து வந்ததையடுத்து லோக்சபாவில், ஏர்செல்-மேக்சிஸ் மற்றும் 2ஜி ஊழல் விவகாரம் குறித்து விவாதம் நடைபெற்றது
உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பதிலளித்து அருண் ஜெட்லி கூறியதாவது: 2ஜி ஊழல் வழக்கிலாகட்டும், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கிலாகட்டும், குற்றவாளிகள் தண்டனை பெறுவது உறுதி. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முந்தைய அரசை போல, தற்போதைய மத்திய அரசு தலையிடவில்லை. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், கடந்த ஜனவரி மாதம், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையில் உள்ளது. பிப்ரவரி 27ம் தேதி, அதாவது 5 நாட்களுக்கு முன்பு, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக, கிடைத்த சில ஆதாரங்களையடுத்து, பல இடங்களிலும், அதுவும் குறிப்பாக, சென்னையில் ரெய்டுகள் நடத்தப்பட்டன. அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ நடத்திய இந்த சோதனைகளில் பல ஆதாரங்கள் சிக்கியுள்ளன. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு மந்தகதியில் நடைபெறுவதாக கூறும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. எப்.ஐ.ஆர் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று சில உறுப்பினர்கள் பேசினர். அமலாக்கத்துறை விசாரிக்கும் வழக்குகளில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யும் நடைமுறை கிடையாது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 2ஜி மற்றும் ஏர்செல்-மேக்சிஸ் ஆகிய இரு வழக்குகளுமே கோர்ட் விசாரணையில் இருப்பதால் மேலதிக தகவல்களை கூற முடியாது. அதேநேரம், இந்த வழக்குகளில் தொடர்புள்ள குற்றவாளிகள் யாராக இருந்தாலும்.. இந்த வார்த்தையை அடிக்கோடிட்டு கொள்ளுங்கள்.., யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும், சட்டப்படி தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும். இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்தார்.
No comments:
Post a Comment