டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமாருக்கு 6 மாத இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஜே.என்.யூ. பல்கலை வளாகத்தில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாளை வீரவணக்க நாளாக மாணவர்கள் அனுசரித்தனர். இந்நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக இந்துத்துவா அமைப்புகள் புகார் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து டெல்லி ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமார் தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து ஜாமின் கேட்டு கன்னையாகுமார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கன்னையாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி பிரதீபா ராணி முன் நேற்று நடைபெற்றது. அப்போது, கன்னையா குமார் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், "மாணவர் கன்னையா குமார் தேச விரோத கோஷங்களை எழுப்பவில்லை. முகமூடி அணிந்திருந்த சில நபர்கள் தான் அந்த கோஷங்களை எழுப்பியுள்ளனர். அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததில் கன்னையாவுக்கு தொடர்பிருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை" என்று தெரிவித்தார். இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா ராணி கன்னையாகுமாருக்கு 6 மாதம் இடைக்கால ஜாமின் வழங்கி இன்று உத்தரவிட்டார். மேலும் ரூ.10 ஆயிரத்தை பிணையத் தொகையாக செலுத்தவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment