வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த நாட்டறம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் ‘டோல்கேட்’ பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று வழக்கம்போல் கல்லூரி செயல்பட்டுக்கொண்டிருந்தது.
இந்த நிலையில் காலை 11 மணியளவில் வானத்திலிருந்து பறந்து வந்த ஒரு மர்ம பொருள் கல்லூரியின் பிரதான கட்டிடத்துக்கு எதிரே உள்ள தோட்டப்பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது பெரும் புகை மண்டலம் ஏற்பட்டது. மர்ம பொருள் விழுந்ததால் ஏற்பட்ட வெடிச்சத்தம் அந்த பகுதியையே அதிர வைத்தது. அப்போது வகுப்பறைக்குள் படித்துக்கொண்டிருந்த மாணவ, மாணவிகள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
வெடிபொருள் வெடித்து சிதறியபோது அந்த பகுதியில் பணியாற்றிக்கொண்டிருந்த கல்லூரி பஸ்சின் டிரைவரான கே.பந்தாரப்பள்ளியை சேர்ந்த காமராஜ் (வயது 40) என்பவர் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடினார். மேலும் தோட்டத்தில் வேலைசெய்து கொண்டிருந்த பணியாளர்கள் முரளி (30), சந்தோஷ் (40), சசிகுமார் (45) ஆகியோரும் படுகாயம் அடைந்து துடிதுடித்தனர். சம்பவம் குறித்து போலீசாருக்கும் தாசில்தாருக்கும் கல்லூரி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர்.
படுகாயத்துடன் துடித்துக்கொண்டிருந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே காமராஜ் இறந்து விட்டார். மற்ற 3 பேரும் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
வெடிபொருள் வெடித்து சிதறிய அதே நேரத்தில் கல்லூரியில் சில அறைகளின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. வளாகத்துக்குள் நிறுத்தப்பட்டிருந்த கல்லூரிக்கு சொந்தமான 5 பஸ்களின் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கின. சம்பவம் நடந்த சில நிமிடங்களில் நாட்டறம்பள்ளி தாசில்தார் செல்வராஜ் கல்லூரிக்கு விரைந்து வந்தார். வெடிபொருள் விழுந்த இடத்தை பார்வையிட்டபோது பெரிய பள்ளம் ஏற்பட்டிருந்தது. அந்த பொருளில் இருந்து புகையும் வெளிவந்து கொண்டிருந்தது.
அதற்குள் நாட்டறம்பள்ளி போலீசாரும் அந்த இடத்தை பார்வையிட்டு மர்மபொருளை சுற்றி வட்டமிட்டு யாரும் நெருங்கிவிடாமல் தடுப்புகளை ஏற்படுத்தினர். கல்லூரி வளாகத்துக்குள் விழுந்தது வானத்திலிருந்து பறந்து வந்த எரிகற்களா? அல்லது ராக்கெட் விழுந்ததா? இல்லையெனில் ஏவுகணை போன்ற பொருள் வந்து விழுந்து வெடித்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து வானியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளுக்கும், வெடிபொருள் நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து விசாரித்த பின்னரே வானத்திலிருந்து விழுந்து வெடித்த பொருள் குறித்த விவரம் தெரியவரும்.
இதனிடையே சம்பவம் நடந்த இடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரி ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். கல்லூரி தலைவர் செல்வமும் அந்த இடத்தை அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.
இந்த சம்பவத்தால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. பின்னர் மாணவ, மாணவிகள் அதிர்ச்சியிலிருந்து நீங்காத நிலையில் வீடுகளுக்கு திரும்பினர். கல்லூரி வளாகத்தில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் எற்படுத்தி உள்ளது.
கல்லூரியில் மர்மபொருள் விழுந்த இடத்தில் 5 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டிருந்தது. அந்த இடத்தை யாரும் நெருங்க முடியாதபடி போலீசார் தடுப்புகளை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
நாட்டறம்பள்ளி பொறியியல் கல்லூரியில் காலை வானிலிருந்து மர்ம பொருள் பறந்து வந்து விழுந்த இடத்தை பார்ப்பதற்காக மாணவர்கள் வந்தனர். ஆனால் அந்த இடத்திற்கு யாரும் செல்லமுடியாதபடி போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த இடத்தில் 5 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment