ஆந்திராவில் செம்மர கடத்தலை தடுத்த இரு அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழகத்தை சேர்ந்த 287 பேர் உட்பட மொத்தம் 349 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி திருப்பதி சிறப்பு நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது. 2013ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி திருப்பதி அருகே, வனப்பகுதியில் செம்மர கடத்தலில் ஈடுபட்ட கும்பலை தடுக்க முயன்ற அம்மாநில வனத்துறை அதிகாரிகள் டேவிட் கருணாகர் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து திருப்பதி ரயில் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்த 349க்கும் மேற்பட்டோரை ஆந்திர காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து வழக்குத் தொடர்ந்தனர். மொத்தம் 454 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும், அதில் 82 பேர் இன்னமும் தலைமறைவாக இருப்பதாகவே கணக்கு காட்டப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டவர்களில் 60க்கும் மேற்பட்ட ஆந்திராவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்தனர். மீதமிருந்த தமிழர்கள் விசாரணைக் காலம் முழுவதும் கடந்த2 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு திருப்பதி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் ஆஜர்படுத்த கோர்ட் வளாகம் போதாது என்பதால், திருப்பதியிலுள்ள, உள் விளையாட்டு அரங்கம் கோர்ட்டாக மாற்றப்பட்டிருந்தது. இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்ட தமிழர்கள் 287 மற்றும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் உட்பட 349 பேரும் விடுதலை செய்யப்படுவதாகவும், இவர்களுக்கு எதிராக ஆந்திர அரசும், ஆந்திர காவல்துறையும் தாக்கல் செய்த ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால், குற்றம்சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தார் மிகுந்த நிம்மதி அடைந்துள்ளனர். 2 ஆண்டு சிறைவாசத்தின்போது 5 தமிழர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அவர்களையும் சேர்த்தால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழர்கள்எண்ணிக்கை 292 ஆகும்.
No comments:
Post a Comment