சீரழிந்து போன தமிழகத்தைச் செப்பனிடவும், மக்கள் நலனில் அக்கறைகொண்ட, ஊழல் அற்ற, நேர்மையான தூய்மையான உண்மையான மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மலர்ந்திட, தமிழக வாக்காளர்கள் மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்கு அளித்து வெற்றிபெறச் செய்து மக்கள் நல அரசு அமைந்திட ஆதரவு அளிக்க வேண்டும் என மதிமுக பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 24வது பொதுக்குழு கூட்டம் திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி அருகே இருக்கும் வி.எஸ்.எம். மஹாலில் இன்று நடைபெற்றது.
கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து வைகோ ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, அரசியல் பொதுவாழ்வில் புடம்போடப்பட்ட புகழ்மிக்க தலைவர்கள் பிறந்த தமிழ்நாடு, இந்திய நாட்டுக்கே வழிகாட்டக் கூடிய பெருமையை ஒரு காலத்தில் பெற்று இருந்தது என்பது கடந்த கால வரலாறு ஆகும். ஆனால், கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக ஆட்சிப்பீடத்தில் இருந்து வரும் தி.மு.க., - அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் தலைமைகளும் ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு, அனைத்து இந்திய அளவில் தமிழகத்திற்கு அவப்பெயரைத் தேடித் தந்துள்ளன. உள்ளாட்சி முதல் தலைமைச் செயலகம் வரையிலும் அனைத்து அரசுத் துறைகளிலும் புரையோடிப் போய்விட்ட ஊழல்களால், தமிழக மக்கள் சலிப்புற்று, நம்பிக்கை இழந்து வேதனை அடைந்து உள்ளனர். மக்கள் நலன் என்ற குறிக்கோள் முற்றிலும் சிதைந்து போனது. குடும்ப நலன், நட்பு வட்டங்கள், ஆட்சி அதிகாரத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கொள்ளையடித்து சொத்துகளைக் குவித்து, தமிழக ஆட்சியாளர்கள் உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்ற அவலத்தைத் தமிழ்நாடு சந்தித்தது. இயற்கை வளங்கள் கொழித்த தமிழ்நாடு மிகப் பெரிய சுரண்டலுக்கு உள்ளானது. நதிக்கரை நாகரிகங்களில் தொன்மைச் சிறப்பு மிக்க வரலாறு கொண்ட காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள், வரைமுறையற்ற மணல் கொள்ளையால் நீரின்றி வறண்டன. ஆற்றுநீர்ப் பாசனத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயத் தொழில் நலிந்தது. தாது மணலை அயல்நாடுகளுக்கு விற்று இலட்சக்கணக்கான கோடிகளைச் சுருட்டினர்.
கல்வித்துறை முற்றிலும் வணிக மயம் ஆகி சீரழிந்தது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிகள் கோடிக்கணக்கில் விலை வைத்துக் கூவி விற்கப்பட்டன. பேராசிரியர்கள் நியமனங்களில் இலட்சக்கணக்கில் பணம் வசூலித்தனர். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையால், பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே உயர்கல்வி என்ற நிலை உருவாகிவிட்டது. மத்திய அரசின் கட்டளைகளை ஏற்று, புதிய பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதால் இன்றியமையாத கல்வித் துறையும், சுகாதாரத் துறையும் அரசின் பொறுப்பில் இருந்து தனியார் வசம் சென்றுவிட்டன. மின்சார உற்பத்தியில் தன்னிறைவு காண முடியவில்லை. எனவே சிறு குறுந் தொழிற்கூடங்கள் நலிவு அடைந்து மூடப்பட்டு விட்டன. பாரம்பரிய நெசவுத்தொழில், தொழில்துறை நலிந்தன. ஐந்தாண்டுக்கால ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ரூ.2 இலட்சத்து 47 ஆயிரம் கோடியாக உயர்ந்து விட்டது. எனவே, புதிய பெருந்தொழில் திட்டங்கள் எதுவும் இல்லை. இதன் விளைவாக வேலைவாய்ப்புகள் இல்லை; வேலை இல்லாப் பட்டதாரிகளின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் உயர்ந்துகொண்டே போகிறது. சமூக சீர்கேடுகளுக்குக் காரணமான மதுப்பழக்கம் தமிழகத்தின் எதிர்காலத்தையே பாழாக்கிவிட்டது. மதுக்கடை வருவாயை நம்பி, அரசு நிர்வாகம் செயல்பட வேண்டிய இழிநிலைமை ஏற்பட்டு இருக்கின்றது. வாக்குகளை அறுவடை செய்வதற்காக தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இலவசங்களை வாரி இறைத்தன; வாக்கு அளிக்கப் பணத்தைக் கொடுத்து மக்களைக் கையேந்துகின்ற நிலைமைக்குத் தாழ்த்தின. உழைப்பே உயர்வு தரும் என்ற பழமொழி கேலிக்கூத்தாகி விட்டது. ஏழை, எளிய விளிம்புநிலை மக்களின் சமூக அவலங்கள் நீடிக்கின்றன. தொழிலாளர்கள் மீதான சுரண்டல்களும் அடக்குமுறைகளும் தொடருகின்றன. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாள்தோறும் செய்திகள் ஆகின்றன. படுகொலைகளும் பகல் கொள்ளைகளும் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது. சாதி வெறி ஆணவக் கொலைகள் சமூகத்தின் ஆணிவேரை அறுத்து வருகின்றன. சாதிய ஒடுக்குமுறைகள் பெருகி விட்டன. மதவாத உணர்வுகள் வளர்ந்து, சகிப்பின்மை உருவாகி வருகின்றது. அரசு நிர்வாகம் ஆளும் கட்சியினரின் கைப்பாவையாகி முடங்கிக் கிடக்கின்றது. அனைத்து மக்களின் வாழ்வாதாரங்களும் பறிக்கப்பட்டுள்ளன. இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு இன்னமும் உரிய நீதி கிடைக்கவில்லை. ஈழத் தமிழர்களைக் கொத்தடிமைகள் ஆக்க சிங்கள இனவாத அரசு இலங்கை அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரத் திட்டமிடுகின்றது. அதற்கு இந்திய அரசு பின்னணியில் இருந்து இயக்குகின்றது. தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாவதும், படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளைப் பறிகொடுப்பதும் தொடருகின்றது, இவை அனைத்திற்கும் தமிழ்நாட்டில் மாறி மாறி 45 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்ற தி.மு.க., அண்ணா தி.மு.க. ஆகிய இரு ஊழல் கட்சிகள் தான் காரணம் ஆகும்.
இந்த இரண்டு கட்சிகளையும் புறந்தள்ளிவிட்டு மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்லும் புதிய ஜனநாயக சக்தி உருவாக வேண்டும் என்ற மக்கள் விருப்பத்தை செயல்படுத்தும் வகையில் தான், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து, ஜூலை 27, 2015 இல் மக்கள் நலக் கூட்டு இயக்கம் உருவாயிற்று. தமிழக அரசியலில் புதிய பரிணாமம் பெற்றுள்ள மக்கள் நலக் கூட்டு இயக்கம் வரலாற்றில் முதன் முறையாக குறைந்தபட்ச செயல்திட்டத்தை வடிவமைத்து, மக்கள் மன்றத்தில் முன்வைத்துள்ளது. 2015 நவம்பர் 2 ஆம் தேதி மக்கள் நலக் கூட்டு இயக்கம், மக்கள் நலக் கூட்டணியாகப் பிரகடனம் செய்யப்பட்டு, நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தோம். தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., கட்சிகளின் பிடியில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்கவும், சீரழிந்து போன தமிழகத்தைச் செப்பனிடவும், மக்கள் நலனில் அக்கறைகொண்ட, ஊழல் அற்ற, நேர்மையான தூய்மையான உண்மையான மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மலர்ந்திட, தமிழக வாக்காளர்கள் குறிப்பாக வருங்கால இளைய தலைமுறையினர் மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்கு அளித்து வெற்றிபெறச் செய்து மக்கள் நல அரசு அமைந்திட ஆதரவு அளிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு வேண்டுகோள் விடுக்கின்றது.
No comments:
Post a Comment