தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 5 கோடியே 79 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. மொத்தம் 5 கோடியே 79 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் இடம்பெற்றுள்ளனர்.
2 கோடியே 88 லட்சம் பேர் ஆண்கள், 2 கோடியே 91 லட்சம் பேர் பெண்கள், முன்றாம் பாலினத்தவர்கள் 4 ஆயிரத்து 383 பேர், 16 லட்சத்து 18 ஆயிரத்து 526 பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்துள்ளனர். 3 லட்சத்து 85 ஆயிரத்து 293 பேர்களது நீக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கல்லூர் தொகுதி அதிக வாக்காளர்களை கொண்ட பெரிய தொகுதி என்ற சிறப்பை பெற்றுள்ளது. அந்த தொகுதியில் 5 லட்சத்து 75 ஆயிரத்து 773 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேலூர் தொகுதி மிக குறைவான வாக்காளர்களை கொண்டுள்ளது. மொத்தம் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 189 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
சென்னையில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தி அடைந்த வாக்காளர்கள் 32 ஆயிரத்து 208 பேர் புதிதாக இணைந்துள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதனை சென்னை மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் விக்ரம் கபூர் வெளியிட்டார். சென்னை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 38 லட்சத்து 28 ஆயிரத்து 723 பேர் ஆகும். அதில் ஆண் வாக்காளர்கள் 19 லட்சத்து 3821 பேரும், பெண் வாக்காளர்கள் 19 லட்சத்து 24 ஆயிரத்து 166 பேரும் உள்ளன. மூன்றாம் பாலினத்தவர் 786 பேர், வாக்காளர் பட்டியல் திருத்தல் பணியின் போது 2365 பேர் நீக்கப்பட்டனர்.
வரைவு வாக்காளர் பட்டியலை விட இறுதி வாக்காளர் பட்டியலில் ஒரு லட்சத்து 18,243 வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்களுக்கு ஜனவரி 25-ம் தேதி அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வண்ண புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. வாக்காளர் பட்டியல் விவரங்களை வாக்காளர் பதிவு அலுவலகம் மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகம், வாக்குச்சாவடி மையங்கள் ஆகிய இடங்களில் பார்வையிடலாம், மேலும் www.election.tn.gov.in என்ற இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.


No comments:
Post a Comment