மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிராக கருத்து தெரிவித்த பா.ஜ.க., எம்.பி. கீர்த்தி ஆசாத் அக்கட்சியில் இருந்து அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் அருண் ஜேட்லி, கடந்த 2013-ம் ஆண்டுவரை, சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவி வகித்தார். அப்போது, டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக போலியாக பல்வேறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், அதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டியது.
இந்த நிதி முறைகேட்டில் அப்போது தலைவர் பதவி வகித்த அருண் ஜேட்லிக்கும் தொடர்பு உள்ளது என்று கூறப்பட்டது. இதனையடுத்து அருண் ஜேட்லி பதவி விலகக்கோரி ஆம்ஆத்மி சார்பில் இன்று டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகார சர்ச்சையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கும் தொடர்பு இருப்பதாக பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் வெளிப்படையாக விமர்சித்து வந்தார். மேலும் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் நடந்து உள்ளதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும், தன் மீது வழக்கு போட்டால் அதனை சந்திக்க தயாராக இருப்பதாகவும், கீர்த்தி ஆசாத் புகார் கூறியிருந்தார் இதையடுத்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பாஜக-விலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா வெளியிட்டார். கட்சியின் கோட்பாடுகளை மீறி செயல்பட்டதற்காகவும், அருண் ஜேட்லியை தாக்கி பேசியதற்காகவும் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment