அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பிரதமர் மோடி 'சிக்னல்' கொடுத்துவிட்டதாக கூறப்படும் விவகாரத்தால் ராஜ்யசபாவில் இன்று கடும் அமளி ஏற்பட்டது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கற்களைக் கொட்டும் பணியை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடியிடம் இருந்து சிக்னல் கிடைத்துவிட்டதாலே கட்டுமானப் பணிகள் தொடங்கப் போவதாக ராமஜன்ம பூமி நியாஸ் தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாஸ் தெரிவித்திருந்தார்.
மேலும் கட்டுமான பணிக்கு கொண்டுவரப்பட்ட கற்களுக்கு அவர் பூஜையையும் நடத்தினார். இந்த விவகாரத்தை ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர். ராஜ்யசபாவில் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. தியாகி, உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்காக மத வன்முறையைத் தூண்டுவதை நிறுத்த வேண்டும். மோடி அரசிடம் இருந்து சிக்னல் கிடைத்துவிட்டதாக மகந்த் நிருத்ய கோபால் தாஸ் கூறியும் உள்ளார் என்பதை சுட்டிக் காட்டினார். இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் கோவில் கட்டுமானத்துக்கான கற்கள் கொட்டப்பட்டுள்ளன. ராமர் கோவில் விவகாரத்தில் பா.ஜ.க.வும் மத்திய அரசும் நீதிமன்றம் நீதிமன்றத்தின் முடிவை ஏற்றுக் கொள்ளும். அந்த இடத்தில் கற்களை குவிக்கக் கூடாது என நீதிமன்றம் எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை. கற்களை உடைத்து செதுக்கும் பணி நடப்பதாலேயே கோவில் கட்டப் போகிறார்கள் என்பது அர்த்தம் அல்ல. நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பொறுத்திருப்போம். நாம் அனைவரும் அதற்கு மதிப்பளிப்போம் என்றார்.
ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று உத்தரப்பிரதேசத்தில் மத வன்முறையை தூண்டுவதை நிறுத்துக என முழக்கமிட்டனர். அப்போது துணைத் தலைவர் பி.ஜே.குரியன், அமைச்சர் நக்வியின் அறிக்கையில் எந்த ஒரு குழப்பமுமே இல்லையே; அரசும், அவரது கட்சியும் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பதாக கூறுகிறார்களே.. எதற்காக இப்போது போராட்டம் நடத்துகிறீர்கள்? தேவையில்லாமல் முழக்கங்களை எழுப்பாதீர்... இருக்கைக்கு செல்லுங்கள் என கூறிப் பார்த்தார். எவருமே பி.ஜே. குரியனின் விளக்கத்தை கேட்கவில்லை. இதனால் சபை நடவடிக்கைகள் 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் சபை கூடிய போதும் காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி எழுந்து அயோத்தி பிரச்சனையை கிளப்பினார். ஆனால் பி.ஜே. குரியன் இதை அனுமதிக்கவில்லை. அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுந்து நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ராஜினாமா செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பத் தொடங்கினர். இதனால் மீண்டும் சபையை ஒத்திவைக்க நேரிட்டது. இரு சபைகளும் காலவரையின்றி ஒத்தி வைப்பு நாடாளுமன்ற லோக்சபாவிலும் அயோத்தி மற்றும் அருண் ஜேட்லி விவகாரங்களால் அமளி நீடித்தது. இதனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சபை நடவடிக்கைகளை மறு தேதி குறிப்பிடாமல் காலவரையின்றி ஒத்திவைத்தார். ராஜ்யசபாவும் காலவரையின்றி மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 13 மசோதாக்கள் நிறைவேற்றம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கியது. மொத்தம் 20 நாட்கள் கூட்டத் தொடர் நடைபெற்றன. இதில் சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பை 16 ஆக குறைப்பது உட்பட மொத்தம் 13 மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. ராஜ்யசபாவில் 9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment