மக்கள் நலக் கூட்டணியில் இணையுமாறு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சியின் செயலர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் முத்தரசன் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு மாற்றாக ம.தி.மு.க, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி உள்ளன. அத்துடன் இக்கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., காங்கிரஸ் ஆகியவற்றை சேர்க்கப் போவதில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தே.மு.தி.க, த.மா.கா. ஆகியவை தங்கள் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் அழைப்பு விடுத்து வந்தனர். இந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை பா.ஜ.க. தலைவர்கள் நேரில் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். ஆனால் தம்மை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று விஜயகாந்த் நிபந்தனை விதித்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் விஜயகாந்த்தை மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான வைகோ, திருமாவளவன், ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து பேசினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது தே.மு.தி.க. மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று அவர்கள் நேரில் அழைப்பு விடுத்தனர். இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும் என அழைப்பு விடுத்தோம். விஜயகாந்த் சாதகமான முடிவை எடுப்பார் என நம்புகிறோம் என்றார். மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற்றால் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.
No comments:
Post a Comment