பீகாரில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் பூரணமதுவிலக்கு அமல்படுத்தப்படமாட்டாது என்றும் உள்நாட்டு மதுபான வகைகளுக்கு மட்டும் முதலில் தடை விதிக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாட்டு மதுபானங்களை தமிழகத்தின் டாஸ்மாக் போல பீகார் அரசின் மதுபான கழக கடைகள் மூலம் விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளதாக நிதிஷ்குமார் தெரிவித்தார். பீகார் சட்டசபை தேர்தலில் அதிரடி வெற்றி பெற்று முதல்வரான நிதிஷ்குமார், 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார். இருப்பினும் இந்த மதுவிலக்கு எப்படி அமல்படுத்தப்படும் என விவரிக்கப்படவில்லை.
இந்நிலையில் பாட்னாவில் நேற்று மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்காக புதிய கொள்கைக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதன்படி ஏப்ரல் 1-ந் தேதி முதல் கட்டமாக உள்நாட்டு மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படும்; இதன் பின்னர் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மதுபானங்கள் நகரங்களில் பீகார் மாநில அரசின் மதுபான கழகங்களின் கடைகள் மூலம் விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பீகாரில் மதுபான விற்பனை மூலம் ஆண்டு வருவாய் ரூ4,000 கோடி கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment