சென்னை: தமிழக சட்டசபையில் வரும் 25-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை தமிழக முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். தமிழக சட்டசபை ஆளுநர் ரோசய்யா உரையுடன் கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கியது. மொத்தம் 4 நாட்கள் மட்டுமே அக்கூட்டத் தொடர் நடைபெற்றது.
அதன் பின்னர் அண்மையில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்து ஆலோசித்தது. இருப்பினும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி குறித்து அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் வரும் 25-ந் தேதி முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள அறிக்கை: 2015-2016-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, 2015-2016-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் , 2014-2015-ஆம் ஆண்டிற்கான இறுதித் துணை நிதிநிலை அறிக்கை ஆகியவை இந்த பட்ஜெட் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. தமிழ்நாடு சட்டசபை விதி 181(1)-ன்கீழ், 2015-2016-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை 2015-ஆம் ஆண்டு மார்ச் 25-ந் தேதி புதன்கிழமை அன்று தாக்கல் ஆகும். 2015-2016-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் 2015-ஆம் ஆண்டு மார்ச் 28-ஆம் நாள் சனிக்கிழமை அன்று முன்வைக்கப்படுகின்றன. 2015-2016-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை 2015-ஆம் ஆண்டு மார்ச் 25-ந் தேதி காலை 10.00 மணிக்கு பேரவைக்கு கிடைக்கும். இவ்வாறு ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment