திருநெல்வேலி சரக டிஐஜி, மாவட்ட எஸ்.பி. மற்றம் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆகியோர் திடீரென மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டது. சமீபத்தில் வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி நெல்லையில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மிகவும் தாமதமாக தமிழக அரசு நடவடிக்கையில் இறங்கியது. இந்த விவகாரத்தில் முக்கியமாக அடிபட்ட அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் வேளாண்துறை செயற்பொறியாளராக இருந்தவர் முத்துக்குமாரசாமி. அண்மையில் நெல்லை பகுதியில் வேளாண்துறையில் 7 ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதனை நேர்மையான முறையில் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை முத்துக்குமாரசாமி மேற்கொண்டார். ஆனால் சென்னையில் இருந்து வேளாண்துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர்கள் எனக் கூறிக் கொண்ட பலர் முத்துக்குமாரசாமியை தொடர்பு கொண்டு தாங்கள் சொல்லும் நபர்களுக்கே பணிவாய்ப்பு வழங்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை நிராகரித்திருக்கிறார் முத்துக்குமாரசாமி. இந்த நிலையில் நீங்கள் நியமித்த நபர்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொடுத்தாக வேண்டும் என்று புது நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் மனமுடைந்த முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இவ்விவகாரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நேரடி தொடர்பிருக்கிறது என்பதால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி வசம் இருந்த திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஆனாலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வசம் இருந்த வேளாண்துறை அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.
தொடர் கொலைகள்:
அதேபோல தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் அடுத்தடுத்து பல கொலைகள் நடந்து மக்களை பெரும் பீதிக்குள்ளாகி வந்தன. இந்தத் தொடர் கொலைகளால் காவல்துறை மீது மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்தப் பின்னணியில்தான் தற்போது நெல்லை, தூத்துக்குடியில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித்சரண் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,யாகவும், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக இருந்த முருகன், நெல்லை சரக டி.ஐ.ஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி எஸ்.பி., துரை, சிவகங்கை மாவட்ட எஸ்.பி.,யாகவும், சிவகங்கை மாவட்ட எஸ்.பி., அஷ்வின், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நெல்லை எஸ்.பி. நரேந்திரன் நாயர் விழுப்புரம் மாவட்டத்திற்கும், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., விக்கிரமன், நெல்லை எஸ்.பி.,யாகவும் மதுவிலக்கு புலனாய்வு பிரிவு எஸ்.பி. யாக சாந்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment