டெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரி கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஆகஸ்ட் 3-ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இதனால் கலாநிதி, தயாநிதி இருவரும் ஆகஸ்ட் 3-ந் தேதி வரை கைது செய்யப்பட வாய்ப்பு இல்லை. ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்குமாறு அதன் உரிமையாளர் சிவசங்கரனை, மத்திய அமைச்சராக இருந்தபோது தயாநிதி மாறன் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழக்கில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையிலும் சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது.
சி.பி.ஐ. தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது விசாரணை நடத்த முகாந்திரம் உள்ளது என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தி தயாநிதி, காலாநிதி, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத் தலைவர் அனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 8 பேருக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டிருந்தார். இந்த சம்மனுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று மாறன் சகோதரர்கள் போராடிப் பார்த்தனர். ஆனால் விசாரணை நீதிமன்றத்திலேயே சம்மனுக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கைவிரித்துவிட்டது. இதனால் வேறுவழியின்றி தயாநிதி மாறன், கலாநிதி மாறன், சன் டைரக்ட் நிறுவனர் சாமி உள்ளிட்டோர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2-ந் தேதி ஆஜரானார்கள். அதேநேரத்தில் மலேசிய தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் மற்றும் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரால்ப் மார்செல் ஆகியோர் ஆஜராகவில்லை.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான மாறன் சகோதர்கள், தங்களுக்கு முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், சன் டைரக்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். இதனையடுத்து சி.பி.ஐ. வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் இருவருக்கும் ஜாமீன் தர கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் இருவரும் கலைத்துவிடுவார்கள் என்றும் சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கில் தொழிலதிபர்கள் ரால்ஃப் மார்ஷ்ல், அனந்த கிருஷ்ணணுக்கு சம்மன் அனுப்ப முடியவில்லை என்றும் சி.பி. ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வெளிநாட்டில் உள்ளோருக்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ. க்கு கால அவகாசம் வழங்கியதுடன், வழக்கின் விசாரணையை ஆக்ஸ்ட் 3-ந் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் இந்த வழக்கில் ஆகஸ்ட் 3-ந் தேதி வரை தயாநிதி, கலாநிதி மாறன் இருவரும் கைதாக வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment