பெருகி வரும் பொறியியல் கல்லூரிகளால், அவற்றின் கல்வித் தரம் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்தார்.
ஹிமாசலப் பிரதேச மாநிலம், மாண்டியில் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (ஐஐடி) இரண்டாவது பட்டமளிப்பு விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மோசமான வானிலை நிலவியதால், பிரணாப் முகர்ஜியால் ஹெலிகாப்டரில் அங்கு செல்ல முடியவில்லை.
இதையடுத்து, பட்டமளிப்பு விழாவில் அவருடைய உரை வாசிக்கப்பட்டது. அதில், பிரணாப் முகர்ஜி கூறியதாவது:
வளர்ந்து வரும் தேவைக்கு ஏற்ப, புதிதாக பொறியியல் கல்லூரிகளைத் தொடங்குவதும் அதிகரித்து வருகிறது. அதனால், அந்தக் கல்லூரிகளின் கல்வியின் தரம், அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை பின்னுக்குச் சென்றுவிட்டன.
உலகம் முழுவதும் உள்ள முதல் 200 பல்கலைக்கழகங்களில், ஒன்று கூட இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்படவில்லை என்று சர்வதேச ஆய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இங்குள்ள சில பொறியியல் கல்வி நிறுவனங்கள், தீவிரமாக செயல்பட்டால் சர்வதேச தகுதியைப் பெற முடியும்.
பொறியியல் கல்வி நிறுவனங்கள் சர்வதேச தகுதியைப் பெறுவது, புதிய வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வதுடன் மாணவர்களின் வேலைவாய்ப்பு அதிகரிக்க உதவியாக இருக்கும்.
மேலும், கல்வி பயில்வதற்காக வெளிநாடுகளில் இருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் இந்தியா வருவதற்கும், அவர்களின் வெளிநாட்டுத் தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்குள் வருவதற்கும் வாய்ப்பாக இருக்கும்.
சர்வதேச தரத்துடன் பாடம் கற்பிக்கும் அளவுக்கு ஆசிரியர்களும் தங்களை தகுதியுள்ளவர்களாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சர்வதேச நாடுகளின் கல்வி நிறுவனங்களுடன் நமது கல்வி நிறுவனங்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த 2011ஆம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த 9 முன்னணி பல்கலைக்கழகங்களுடன் மாண்டி ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்தத் தொடர்புகளைப் முழுமையாகப் பயன்படுத்தி மாணவர்களும், ஆசிரியர்களும் சர்தேச அளவில் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று பிரணாப் முகர்ஜி தனது உரையில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment