நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. ஆதார் அட்டைகள் இல்லை என்பதற்காக எந்த ஒரு நபருக்கும் பயன்களை மறுக்கக் கூடாது, அதனால் அவர் பாதிப்படையக் கூடாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் ஆதார் அட்டை கேட்டு மக்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆதார் அட்டை இல்லையென்றால் இந்தியாவிலேயே வாழத்தகுதியற்றவர்கள் என்கிற ரீதியில் இன்றைக்கு பார்க்கப்படுகிறது. இல்லத்தரசிகளின் அவசியம், அத்தியவசியமான கேஸ் சிலிண்டர் கூட மானியத்திற்காக ஆதார் எண் பதிவு செய்யப்படாத காரணத்தால் மறுக்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில் கடந்த 2013ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்த உச்சநீதிமன்றம், ஆதார் அட்டை இல்லாத எவருக்கும் நலத்திட்ட உதவிகளை மறுக்கக் கூடாது என கூறியிருந்தது. இருப்பினும், ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என பல்வேறு மாநிலங்களில் அதிகாரிகள் கூறியதாக புகார் எழுந்தது. இதுகுறித்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
ஆதார் அட்டை இல்லாததன் காரணமாக மக்களுக்கு சேர வேண்டிய நலன்கள் போகாமல் இருக்கக் கூடாது என்றும், ஆதார் அட்டை கேட்டு தொந்தரவு செய்யவேண்டாம் என்றும், இது குறித்து தங்களது முந்தைய உத்தரவை மத்திய, மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. Show Thumbnail
நீதிபதிகள் உத்தரவு
"ஆதார் அட்டையை சில அதிகாரிகள் மக்களிடத்தில் வலியுறுத்துவதாக எங்கள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. நாங்கள் இது குறித்த தனிப்பட்ட சம்பவங்களுக்குள் செல்ல விரும்பவில்லை. இது குறித்து செப்.23, 2013 அன்று நாங்கள் பிறப்பித்த உத்தரவுகளை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும்." என்று நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு திங்கட்கிழமையன்று திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.
மீறப்படும் உத்தரவுகள்
இது குறித்து ஒருவர் செய்த மனுவின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், "நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி, அதிகாரிகள் சிலர் குத்தகை ஒப்பந்தம், திருமண பதிவு போன்ற விஷயங்களுக்காக ஆதார் அட்டையை வலியுறுத்தி வருகின்றனர். இது ஒரு பெரிய கவலையளிக்கும் விஷயமாகும்" என்று கூறினார். இதற்கு நீதிபதிகள், "எங்கள் கவனத்துக்கும் இத்தகைய விவகாரங்கள் வந்துள்ளது. எங்களது முந்தைய உத்தரவுகளை கடைபிடிக்க கோருகிறோம்." என்றனர்.
மாநில அரசுகளுக்கு உத்தரவு
மேலும், அரசு சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமாரை நோக்கி, "உங்களுக்கு இதற்காக மேலும் வாய்ப்புகள் அளிக்க முடியாது." என்றனர். அதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல், "இது குறித்து அனைத்து தலைமைச் செயலர்களுக்கும் உடனடியாக மத்திய அரசு தகவல் அனுப்பும்" என்றார்.
குவியும் மனுக்கள்
இந்த விசாரணையின் போது, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளிடத்திலும் அதிகாரிகள் சிலர் ஆதார் அட்டையை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளதை தெரிவித்தனர். ஆதார் அட்டை வலியுறுத்தலுக்கு எதிராக நிறைய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் குவிந்துள்ளன. இறுதி கட்ட விசாரணை தற்போது ஜூலை மாதம் 2 ஆம் வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment