கரூர் கரூரில் பன்னாட்டு கம்பெனிக்கு ஆட்கள் தேவை என்ற பெயரில் நடத்தப்பட்ட மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பன்னாட்டு கம்பெனிக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரப்படுத்தி, கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பி.எல்.ஏ மஹாலில் இன்று வேலைக்கு ஆட்கள் எடுப்பது போல் அவர்களிடம் இருந்து விண்ணப்பம் மற்றும் சுயவிபரக்குறிப்புகள் ஆகியவைகள் எம்.என்.சி கம்பெனியின் பெயரில் சில வாலிபர்கள் வாங்கியுள்ளனர்.
இந்த வேலை தொடர்பாக, பகுதி நேர வேலை என்றால் ரூ 9 ஆயிரம், முழு நேர வேலை என்றால் ரூ 20 ஆயிரம், ஞாயிறு மட்டும் வேலை என்றால் ரூ 6 ஆயிரம் என்று அச்சிடப்பட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு சீட்டுகளை கரூர் நகரம் முழுவதும் விநியோகித்தும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை முதல் மதியம் வரை ஆட்களை தேர்வு செய்த நிலையில், ஏற்கனவே இத்தகைய விளம்பரம் மூலம் பாதிக்கப்பட்ட முத்துராஜபுரத்தை சார்ந்த எம்.பிரேமலதா என்கிற பெண் ஏமாற்றப்பட்டது தெரிய வந்துள்ளது.
முன்னர் இப்பெண்ணை வேலைக்கு சேர்ப்பது போல் சேர்த்து, முதலில் பணம் எதுவும் வேண்டாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்கள். வேலையில் சேர்ந்த பின் ரூ 8 ஆயிரம் பணம் வேண்டும் என கூறவே, அப்பெண் அவரிடம் இருந்த நகையை அடமானம் வைத்து பணத்தை கட்டியுள்ளார். பணம் கட்டியபின், அப்பெண்ணிடம் மேலும் மூன்று பேரை தங்களுக்கு கீழே சேர்த்து கொள்ளுமாறு அந்த வாலிபர்கள் உத்திரவிட்டுள்ளனர்.
ஆனால் யாரும் சேராத நிலையில் பாதிக்கப்பட்ட பெண் பல முறை பணத்தை கேட்டும் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இந்நிலையில், வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் வெளியிட்டு ஆள் சேர்த்த வாலிபர்களை கையும் களவுமாக பிடித்து கரூர் நகர காவல்துறையினரிடம் எம்.பிரேமலதா இன்று ஒப்படைத்தார். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இது போன்ற எம்.என்.சி கம்பெனி நிறுவனம் மற்றும் எம்.எல்.எம் மார்க்கெட்டிங் நிறுவனங்களின் விளம்பரங்களைக் கண்டு பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை பதிவு செய்த கரூர் நகர காவல் துறையினர், அந்த வாலிபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment