மறைந்த மக்கள் ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம், ஜனாதிபதிகள் வெறும் "ரப்பர் ஸ்டாம்ப்" என்ற கருத்தை தமது பதவி காலத்தில் தகர்த்த சம்பவங்கள்; சுகோய் போர் விமானத்தில் பறந்த நினைவுகள் குறித்து APJ Abdul Kalam: A Life என்ற புத்தகத்தில் அவருடன் நீண்டகாலம் பயணித்த அருண் திவாரி பதிவு செய்துள்ளார். அப்துல்கலாமின் அக்னி சிறகுகள் நூல் இளைஞர்களின் வழிகாட்டியாக திகழ்கிறது. இந்த அக்னி சிறகுகள் உட்பட கலாமுடன் இணைந்து 5 நூல்களை எழுதியவர் அருண் திவாரி.
தற்போது APJ Abdul Kalam: A Life என்ற தலைப்பில் 551 பக்கங்களைக் கொண்ட புத்தகம் ஒன்றை அருண் திவாரி எழுதியுள்ளார். அந்த நூலின் ஒரு அத்தியாயம்தான் " I will Fly". அதில், ஒரு நாடாளுமன்ற எம்.பி.யாக இருந்து கொண்டு ஆதாயம் தரும் பதவியில் இருந்ததற்காக சமாஜ்வாடி கட்சியின் ராஜ்யசபா எம்.பி. ஜெயாபச்சனை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையை அப்படியே ஜனாதிபதியாக இருந்த கலாம் ஏற்றுக் கொண்டார் என்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கலாம் சுகோய் போர் விமானத்தில் பறந்தது பற்றியும் அதில் விவரிக்கப்பட்டுள்ளது. அருண் திவாரி தமது புத்தகத்தில் பதிவு செய்துள்ளதாவது: பெரும் பரப்புகளுக்கு இடையிலும் கலாம் போர் விமானியாக ஆசைப்பட்ட தன்னுடைய சிறுவயது கனவிலும் கவனம் செலுத்தி வந்தார். இளவயதில் போர் விமானி ஆக வேண்டும் என்ற அவரது கனவு பொய்த்தாலும், அதன் மீதான நாட்டம் குறையாமல் இருந்தது.
அவர் ஜனாதிபதியாக இருந்தபோது சுகோய் போர் விமானத்தில் பறந்து தனது ஆசையை அவர் நிறைவேற்றிக் கொண்டார்... அப்போது அவருக்கு வயது 74. அந்த வயதிலும் தனது இளவயது ஆசையை நிறைவேற்ற அவர் தயக்கம் காட்டவில்லை. போர் விமானங்கள் அதிவேகத்தில் செல்லக்கூடியவை. அதில் பறப்பதற்கான உடல்தகுதி சிறப்பாக இருக்க வேண்டும். அதனால் அப்துல்கலாமுக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில், அவரது உடல்நலம் சிறப்பாக இருப்பதாக சான்றளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி சுகோய் - 30 எம்.கே.ஐ போர் விமானத்தில் கோ-பைலட் இருக்கையில் அமர்ந்து பறந்தார்.
தன்னுடைய இறப்பிற்கு முன்பு அப்துல் கலாம், சுகோயில் பறந்தது மறக்க முடியாத அனுபவம் எனக் கூறினார்.. "நான் மேலேயும், கீழேயும் சென்றேன். போர் விமான விங்க் கமாண்டர் அஜய் ரத்தோர் கூறியவற்றை சரியாக செய்தேன். அவர் ஒரு சிறந்த ஆசிரியர். கண்டிப்பாக இந்திய இளைஞர்கள் விமானப் படையில் ஆர்வம் காட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.இவ்வாறு தம்முடைய புத்தகத்தில் அருண் திவாரி பதிவு செய்துள்ளார்.
No comments:
Post a Comment