Latest News

ஒரு வாழைப்பழம் 20 ரூபாய்... சிங்கிள் டீ 20 ரூபாய்... அரை லிட்டர் பால் 100 ரூபாய்: இது இன்றைய நிலவரம்


சென்னையில் மழை நின்றாலும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்கிறது. மழையினால் உணவு, குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் பல கடைகள் மூடப்பட்டுள்ளதால் திறந்திருக்கும் ஒருசில கடைகளிலும் விலைவாசி விண்ணை எட்டும் அளவிற்கு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் திறந்திருக்கும் கடைகளில் ஒரே ஒரு வாழைப்பழம் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்ட பாக்கெட் தண்ணீர் 10 ரூபாய்க்கும். சிங்கிள் டீ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏழையோ, பணக்காரனோ முதன்மையான தேவை பசிக்கு சாப்பிட உணவும், பருக நீரும்தான். இதுநாள்வரை வசதியாக சமைத்து சாப்பிட்டவர்கள் கூட இந்த மழையால், அகதிகளைப் போல வீடுகளை விட்டு வெளியேறி உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். சாலையோரங்களில் சமூக நல ஆர்வலர்கள் வேன்களில் கொண்டுவந்து கொடுக்கும் உணவு கூட பலருக்கும் அமிர்தமாக இருக்கிறது. மொட்டைமாடியில் நின்று கொண்டு யாராவது உணவு, பிஸ்கெட் கொடுக்கமாட்டார்களா என்று ஏராளமானோர் ஏங்கித் தவிக்கின்றனர் ஏ.டி.எம். எந்திரங்கள் முடங்கியதால் தேவைப்படுகிற பணத்தை எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. டீசல் தட்டுப்பாடு செல்போன் கோபுரங்களை விட்டு வைக்கவில்லை. மழையில் டவர்கள் செயலிழந்து போகவே வெளியில் யாரையும் தொடர்பு கொண்டும் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரமின்றி நான்கு நாட்களாக தவித்து வருவது ஒருபுறம் இருக்க, பால், டீ, காபி, மெழுகுவர்த்தி போன்ற அத்தியாவசிய பிரச்னையும் விஸ்வரூபமெடுத்துள்ளது வெள்ளம் பாதித்த பகுதிகளில், மக்கள் நிற்கதியாக தவிக்கும் நிலையில், ஒரு குடிநீர் பாக்கெட், 10 ரூபாய்க்கும், ஒரு வாழைப்பழம், 20 ரூபாய்க்கும் விற்கும் அவலம் சென்னையில் நடக்கிறது.

சைதாப்பேட்டை மக்கள் அடையாறு வெள்ளம் கபளீகரம் செய்தது முதலில் சைதாப்பேட்டை பகுதி மக்களைத்தான். அனைத்தையும் போட்டது போட்டபடி விட்டு விட்டு உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு போனவர்களுக்கு விலைவாசிதான் மயக்கத்தை வரச்செய்தது. சென்னை, சைதாபேட்டை பகுதியில், செவ்வாய்கிழமை காலை, வழக்கமாக, ஒரு ரூபாய்க்கும் விற்கும் குடிநீர் பாக்கெட், 10 ரூபாய்; ஒரு வாழைப்பழம், 20 ரூபாய்; 10 ரூபாய் பிஸ்கட் பாக்கெட், 20 ரூபாய்க்கு விற்கப்பட்டன.

இட்லி 50 ரூபாய் அங்குள்ள ஓட்டல் மூடப்பட்டு, டோக்கன் கொடுத்து உணவுகள் தரப்பட்டன. இரண்டு இட்லி, 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் போல், நேற்றும், அரை லிட்டர் பால் பாக்கெட், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. குடிநீர் கேன், 50 - 75 ரூபாய் வரை, அநியாயமாக விலை வைத்து வியாபாரிகள் விற்றனர்.

எரிகிற வீட்டில் பிடுங்குவதா? விலை உயர்வு கடும் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், பாதிப்பு பகுதி மக்கள், இதுவாவது கிடைக்கிறதே என, வேறு வழியின்றி வாங்கிச் சென்றனர். அதே நேரத்தில் ஏராளமானோர் இலவசமாய் கொடுக்க, ஆபத்து நேரத்தில் மக்களுக்கு முடிந்த அளவு உதவி செய்வதை விட்டுவிட்டு, மனிதாபிமானமற்ற முறையில் கொள்ளையடிக்கலாமா என்று , சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அரை லிட்டர் பால் ரூ. 100 அரைலிட்டர் பாக்கெட் பால் விலை 100 ரூபாய். சில இடங்களில் அதுவே 120 ரூபாய் வரை கொடுத்தால்தான் கிடைக்கிறது. பால் விலை (கனமழை காரணமாக பால் உற்பத்தி மையங்களில் வெள்ளம் புகுந்ததால் இந்த நிலை என காரணம் கூறப்படுகிறது. திடீர் என ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்து விட்டதால் கேன்களில் அடைத்து கொண்டு வரப்படும் 

பால் பவுடர்கள் விற்பனை பாலுக்கு மாற்றாக குழந்தைகளின் உணவான அமுல்யா, அமுல்ஸ்பிரே போன்ற டின் (பால்) பவுடர் டப்பாக்கள் மொத்த மொத்தமாக கடைகளில் விற்பனையாகின. ஒரு சில மொத்த விலைக் கடைகளில் இந்த வகை பால் டப்பாக்கள் ஸ்டாக் இல்லை என்ற காரணம் சொல்லியதோடு, கூடுதல் விலைக்கு விற்ற கொடுமையும் நடந்தது.

மெழுகுவர்த்திக்கு வந்த கிராக்கி சென்னை முழுவதும் மின் தடை நீடிப்பதால், மெழுகுவர்த்திக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடைகளில் இருந்த, 'ஸ்டாக்' ஒரு நாளுக்கு கூட போதுமானதாக இல்லை. எமர்ஜென்சி விளக்குகள் இருந்தாலும் அவற்றை சார்ஜ் செய்ய இல்லாத வீடுகள், குடிசைப் பகுதிகளில், சிம்னி விளக்கு ஏற்றக் கூட, கெரசின் கிடைக்கவில்லை. ஒவ்வொரு மொத்த விலைக்கடைகள் , சர்ச் வாசல்கள் என்று அடுத்து தேடித்தேடி மெழுகுவர்த்திகளை பதுக்கிக் கொண்டிருக்கிறார்கள்

கடும் தட்டுப்பாடு மழை பாதிப்பு பெரிதாக இல்லாத பகுதிகளில், சமையல் எண்ணெய், முட்டை, பிரட் உள்ளிட்ட பொருட்கள் எந்த கடைகளிலும் கிடைக்கவில்லை; நிலைமை சீராக, ஓரிரு நாளாகும் என்று வணிகர்கள் தெரிவித்தனர். கோவையில் பிரட் பாக்கெட், பிஸ்கெட் என மொத்தமாக வாங்கி சென்னைக்கு அனுப்பி விட்டதால் அங்கு சில்லறை வணிகர்களுக்கு கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.