டெல்லியில் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பி.எஸ்.எப்) சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 10 பேரும் பலியாகி உள்ளனர். விமானம் விபத்துக்குள்ளான சில நிமிடங்களுக்கு முன்னர்தான் அப்பகுதியில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த நிலையில் நூலிழையில் 100க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பியுள்ளனர். டெல்லியில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் சிறிய ரக விமானம் இன்று காலை 9.35 மணியளவில் இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அது புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி உணர்ந்தார்.
இதனால் விமானத்தை விமான நிலையத்துக்கு அவர் திருப்ப முயன்ற நிலையில் கீழே பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று கடந்து சென்றிருக்கிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளும் அப்பகுதியில் இருந்தன. அதனால் அதே இடத்தில் திருப்பாமல் வேறு திசையில் அவர் முயற்சிக்க அப்போது எதிர்பாராதவிதமான விமான நிலையத்தின் சுற்றுப்புற சுவரில் விமானம் மோதி வெடித்தது. இதில் பயணித்த 10 பேருமே பலியாகிவிட்டனர். விமானம் பறந்த போது கீழே சென்றது டெல்லி- அகமதாபாத் ஆசிரமம் எக்ஸ்பிரஸ் ரயில். அதன் மீது விமானம் விழுந்து நொறுங்கியிருந்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் பெரும்விபத்து நிகழ்ந்திருக்கும். அதேபோல் குடியிருப்பு பகுதிகள் மீது விமானம் விழுந்திருந்தாலும் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.
ஆனால் உயிரிழந்த விமானியின் சாதுரியத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுவிட்டது. இவ்விபத்து நிகழ்ந்த இடத்துக்கு 15 தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்றன. விமான விபத்து நிகழ்ந்த இடத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், டெல்லி ஆளுநர் நஜீப்சிங் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
No comments:
Post a Comment