தமிழக சட்டசபை தேர்தலில் ஆளும் அ.தி.மு.க மற்றும் தி.மு.க.வுக்கு மாற்றாக நாங்கள்தான் களத்தில் இருக்கிறோம் இன்று களமாட கிளம்பிவிட்டது வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி. இந்த கூட்டணியின் உதயத்தால் எதிரணி வாக்குகள் சிதறுகிறது என்ற நிம்மதியில் அ.தி.மு.கவும் என்னய்யா இப்படி வாக்குகளை பிரித்து மெகா கூட்டணி கனவை தகர்த்துவிட்டார்களே என்ற தவிப்பில் தி.மு.கவும் இருக்கின்றன. அரசியல் வானத்தில் மேகங்கள் செல்லும் திசைகளை யூகித்துவிடலாம்.. ஆனால் உறுதியாக கணித்துவிட முடியாது.. அப்படி கணித்தாலும் அது சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் 'ரமணின்' கணிப்புகளாகத்தான் இருக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் இன்றைய "வைகோவின்" மக்கள் நலக் கூட்டணியே. 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றது ம.தி.மு.க. ஆனால் ஒரு இடத்தில் கூட அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. இந்திய அளவில் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அந்த ஆட்சி அமைந்த நாள் முதலே பா.ஜ.கவுக்கு எதிரான கலகக் குரலை வெளிப்படுத்தினார் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ.
பா.ஜ.கவுக்கு பை பை பதவி ஏற்பு விழாவுக்கு இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சேவை மோடி அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இருகரம் கூப்பி கண்ணீர்மல்க கோரிக்கையெல்லாம் வைத்துப் பார்த்தார் வைகோ.. எதுவும் எடுபடவில்லை... அதன் பின்னர் பா.ஜ.க. அணியில் இருந்து மெல்ல மெல்ல ம.தி.மு.க. விலகும் போக்கை கடைபிடித்தது.
தி.மு.க.வுக்கு சிக்னல் அதே நேரத்தில் ம.தி.மு.க. கால்நூற்றாண்டு கால கட்சியாக இருந்தாலும் இப்போதும் அ.தி.மு.க. அல்லது தி.மு.க. என்ற ஊன்றுகோல் இல்லாமல் சுயம்புவாக தேர்தல் களத்தில் நடைபோட முடியாத சவலைப்பிள்ளையாகத்தான் இருக்கிறது... அதனால் பா.ஜ.கவில் இருந்து விலகும் அதே நேரத்தில் தி.மு.கவுடன் அணி சேருவதற்கான சமிக்ஞைகளையும் ம.தி.மு.க. பொதுச்செயலர் அதிரடியாக வெளிப்படுத்தினார்...
திமுகவுடன் நெருக்கமோ நெருக்கம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற ம.தி.மு.க. மாநாட்டில், "பொது எதிரி ஜெயலலிதாதான்" என்று வைகோ பிரகடனம் செய்ததால் சோர்ந்திருந்த ம.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்... அண்ணன் எப்படியும் தி.மு.க.வுடன் கை கோர்த்துவிடுவார்...என்ற நம்பிக்கையை ஆழமாக விதைத்தவர் வைகோதான்.. அதன் பின்னர் அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் ஸ்டாலினுடன் வைகோ சந்தித்தார்; இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் மீண்டும் ஸ்டாலின் - வைகோ சந்திப்பு நடந்தது. இவ்வளவு ஏன் ஜூன் மாதம் கூட தி.மு.க. தலைவர் கருணாநிதி இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட வைகோ, எங்களுக்கு இடையே இனி பிரிவில்லை என்று சபதமேற்றார். அதேபோல் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்திலும் கூட, தி.மு.கவுடன்தான் கூட்டணி.. எல்லோரும் தி.மு.க, நிர்வாகிகளுடன் நெருக்கமாக இருங்கள் என்று சொன்னவரும் வைகோதான்.... இதனால்தான் நிச்சயம் தி.மு.க. தலைமையிலான ம.தி.மு.க. இடம்பெறும் என்று அனைத்து ஊடகங்களும் ஆரூடத்தை அடித்துச் சொல்லின...
வைகோவின் அந்தர்பல்டி ஆனால் அண்ணன் வைகோ அடித்தாரே அந்தர் பல்டி... அதனால் அதிர்ந்தது தி.மு.க. மட்டுமல்ல.. ம.தி.மு.க. நிர்வாகிகளும்தான்... திடீரென இடதுசாரிகள், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், காந்திய மக்கள் இயக்கம் என 6 கட்சிகளை இணைத்துக் கொண்டு மக்கள் நலனுக்கான கூட்டியக்கம் உருவாக்கப்பட்டது. இந்த கூட்டியக்கத்தை உருவாக்கிய நாள்முதலே "இது ஒரு தேர்தல் கூட்டணி" என்று அடித்து சொன்னது வைகோ மட்டும்தான்.. இதை ஏற்க மறுத்துதான் காந்திய மக்கள் இயக்கம், மனித நேய மக்கள் கட்சி வெளியேறின. இதனால் 4 கட்சி கூட்டணியாக சுருங்கிப் போனது. இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபரில் காஞ்சிபுரத்தில் பேசிய வைகோ, திருவாரூரில் அக்டோபர் 5ம் தேதி மக்கள் நலனுக்காக கூட்டியக்கம் தேர்தல் கூட்டணியாக அறிவிக்கப்படும் என்று கூறினார். வைகோவின் இந்த பேச்சுகள் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. மக்கள் நலனுக்கான கூட்டியக்கத்தை கூட்டணியாக மாற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தவர் வைகோதான்... ஆனாலும் அவரது எண்ணம் சரியாக ஒரு மாதம் கழித்தே பெரும் போராட்டத்துக்கு இடையே நிறைவேறியுள்ளது.
கட்சியையே காவு கொடுத்து... வைகோ எண்ணியபடி உதயமாகிவிட்டது மக்கள் நலக் கூட்டணி... இன்னும் சொல்லப் போனால் சொந்த கட்சியை காவு கொடுத்துவிட்டு மக்கள் நலக் கூட்டியக்கத்தை "வெற்றிகரமாக" உருவாக்கியிருக்கிறார் வைகோ. இப்படி மெனக்கெட்டு உருவான மக்கள் நலக் கூட்டணியால் ஆதாயம் அடையப் போவது யார்?
கட்சிகளின் பலம் இந்த கூட்டணியின் மொத்த பலம் சுமார் 6 முதல் 8% வாக்குகள் என்ற அளவில் இருக்கலாம். 2011 சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடாமல் புறக்கணித்தது. 2006 தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு 6% வாக்குகள் கிடைத்தன. கடந்த 9 ஆண்டுகளில் ம.தி.மு.க. பிளவுக்கு மேல் பிளவுகளை சந்தித்து உள்ள நிலையில் தற்போது தோராயமாக 2-3% வாக்குகள் அக்கட்சிக்கு இருக்கக் கூடும். 2011 சட்டசபை தேர்தலின் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மொத்தம் 4%; விடுதலை சிறுத்தைகளுக்கு 1.5% வாக்கு சதவீதம் உள்ளன. இந்த 6- 8% வாக்குகள் அனைத்தும் தி.மு.க. கூட்டணியில் இருக்க வேண்டியவை. இந்த 4 கட்சிகளும் தி.மு.க. அணியில் இருந்திருந்தால் நிச்சயம் அக்கட்சிக்கு பெரும் தெம்பாக இருந்திருக்கும். தமிழக அரசியல் களத்தில் அ.தி.மு.க.- தி.மு.க.வுக்கு இடையேயான வாக்கு சதவீத இடைவெளி என்பதே இந்த 6-8% தான். இப்படி தி.மு.க. தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைந்திருந்தால் இயல்பாகவே 5-8% வாக்கு வங்கி கொண்ட தே.மு.தி.மு.க.வும் 3-5% வாக்குகள் உள்ள காங்கிரஸும் தி.மு.க. அணியில் கை கோர்த்து பிரமாண்ட வெற்றிக்கு கட்டியம் கூறியிருக்க முடியும். Show Thumbnail
பணால் ஆனது மெகா கூட்டணி ப்ளான் கடந்த ஜூன் மாதம்வரை தி.மு.க. மட்டுமல்ல... பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் ஊடகங்களின் கணிப்புகள் இப்படித்தான் இருந்தன... அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் இப்படி ஓரணியில் திரண்டுவிடுவதை ஆளும் அ.தி.மு.க. அவ்வளவு எளிதாக விட்டுவிடவும் செய்யாது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. தற்போது அ.தி.மு.க. விருப்பப்படி தி.மு.கவின் "மெகா கூட்டணி" எதிர்பார்ப்பு பணால் ஆகிவிட்டது.... என்னதான் அ.தி.மு.கவை மக்கள் நலக் கூட்டணி விமர்சித்தாலும் எவ்வளவு கடுமையாக விமர்சித்தாலும் 'வாக்குகளை பிரிக்கிறார்களே' ... சொந்த கட்சியையே காவு கொடுத்து அரும்பாடுபட்டு நமக்காக கூட்டணி அமைத்திருக்கிறார்களே... அந்த பேருதவிக்கு பிரதி உபகாரமாக எந்த ஒரு நெருக்கடியும் ஆளும் தரப்பில் இருந்து இல்லாமல் மக்கள் நலக் கூட்டணியின் பயணம் தொடரப் போகிறது.
தி.மு.கவின் தத்தளிப்பு அத்துடன் 2016 சட்டசபை தேர்தலில் தி.மு.கவின் வியூகத்துக்கு விழுந்த முதல் பலத்த அடியும் கூட இந்த "மக்கள் நலன் கூட்டணி"... இதற்காக தி.மு.க. ஓய்ந்துவிடுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.. எப்படியும் மக்கள் நலன் கூட்டணியை உடைக்கவே அக்கட்சி முயற்சிக்கலாம்... அதே நேரத்தில் உடைய விடாமல் அ.தி.மு.க. முட்டுக் கொடுக்கும் என்பதும் அரசியல் கள யதார்த்தம்... தி.மு.க.வைப் பொறுத்தவரையில் தற்போது தே.மு.தி.க, காங்கிரஸ் என்ற 2 மீன்களை தனது வலையில் விழ வைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது... தி.மு.கவின் மீட்சி; 2016-ல் ஆட்சி கனவு என்பதெல்லாம் இந்த 2 மீன்கள் சிக்குவதைப் பொறுத்து மட்டுமே....!


No comments:
Post a Comment