60 ஆண்டுகளுக்குப் பின் வட மற்றும் தென்கொரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
கடந்த 1950-53ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போருக்கு பின்னர் வட மற்றும் தென் கொரியா என இருநாடுகள் உருவாகின. இதில் ஒரே குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இரு நாடுகளிலும் வசித்து வருகின்றனர்.
அதேநேரம், இவ்விரு நாடுகளுக்கும் இடையே கடுமையான பகைமை நிலவி வருவதால் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இவ்விரு நாடுகளுக்கு இடையே அனைத்து விதமான தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் தங்களது உறவினர்களை சந்திக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.
இதனையடுத்து செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச தொண்டு நிறுவனங்களின் முன் முயற்சியால் இவ்விரு நாடுகளிலும் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் நேரில் சந்தித்து பேசிக் கொள்ளும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இதன்படி கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரு தேசத்திலும் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் சந்தித்துக் கொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க உணர்ச்சி மிகு நிகழ்வு நடைபெற்றது. ஆனால், இதன் பிறகு இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் உண்டானதால் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், தென்கொரியா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகள் பேச்சுவார்த்தையை தொடங்கினர். சுமார் 23 மணி நேரம் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு செவ்வாயன்று காலை குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதன்படி வருகின்ற அக்டோபர் மாதம் 20ம் தேதியன்று இந்த வரலாற்று சிறப்புமிக்க குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் தலா 100 பேர் இரு நாடுகளிலிருந்தும் பங்கேற்க உள்ளனர்.


No comments:
Post a Comment