பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட விசாரணைக் கைதி ஒருவர் போலீசாரின் துப்பாக்கியை பறித்து கண்மூடித்தனமாக சுட்டார். இதையடுத்து அங்கு வரவழைக்கப்பட்ட கமாண்டோ படையினர் சுட்டதில் அவர் பலியானார். பெங்களூரில் உள்ள பைரசந்திராவைச் சேர்ந்தவர் விஸ்வநாத்(22). கொலை மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். 3 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவரின் மனநிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரை போலீசார் அவ்வப்போது பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் போலீசார் அவரை நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். மருத்துவமனை வளாகத்தில் சிறை கைதிகளுக்கான வார்டுக்கு அவரை அழைத்துச் சென்றனர். மதியம் 3.45 மணிக்கு அவர் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறி தனது கைவிலங்கை கழற்றிவிடுமாறு போலீசாரிடம் தெரிவித்துள்ளார். போலீஸ்காரர் ஒருவரை அவரது கைவிலங்கை கழற்றிவிட்டதும் கழிவறைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அவர் போலீஸ்காரர் ஒருவர் வைத்திருந்த துப்பாக்கியை பறித்து தரை மற்றும் மேலே நோக்கி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். இதை பார்த்த போலீசார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சேர்ந்து ஒரு வழியாக அவரை ஒரு அறைக்குள் தள்ளி பூட்டினர். உடனே அருகில் இருந்த அறைகளில் இருந்த நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்றினர். துப்பாக்கியை தருமாறு போலீசார் கேட்டதற்கு அவர்களை நோக்கி அவர் சுட்டார். அவரது குடும்பத்தாரை அவருடன் போனில் பேச வைத்தும் அவர் துப்பாக்கியை அளிக்காமல் சுட்டார். இதையடுத்து கருடா கமாண்டோ படையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். விஸ்வநாத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை பலனிக்காததால் கமாண்டோ படையினர் அந்த அறைக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் விஸ்வநாத்தின் நெஞ்சில் குண்டு பாய்ந்தது. உடனே ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். விஸ்வநாத் 23 ரவுண்டுகள் சுட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் மதியம் 3.45 மணியில் இருந்து 6 மணி வரை நிம்ஹான்ஸ் மருத்துவமனை வளாகம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment