எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று நேரில் சந்தித்து அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். 'உயிர்மை' இலக்கிய இதழின் ஆசிரியரான மனுஷ்யபுத்திரன் தொலைக்காட்சி விவாதங்களிலும் பத்திரிகைகளிலும் தி.மு.க.வுக்கு ஆதரவாக கருத்துகளை முன்வைத்து வந்தார். இவரது சகோதரி கவிஞர் சல்மா, ஏற்கெனவே தி.மு.க.வில் இருப்பவர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி.மு.க.வின் முப்பெரும் விழா விருதுகளில் கலைஞர் விருதுக்கு மனுஷ்யபுத்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தாம் தி.மு.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருப்பதாக ஃபேஸ்புக் பக்கத்தில் மனுஷ்யபுத்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது பதிவு:
இன்று காலை கலைஞர் அவர்களை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து கலைஞர் விருதிற்கு தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்தேன். மேலும் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிகாரப் பூர்வமாக இணையும் படிவத்தில் கையெழுத்திட்டேன். பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உடனிருந்தார். திராவிட இயக்க இலட்சியங்களையும் சமூக நீதிக் கோட்பாடுகளையும் முன்னெடுக்கும் எனது பயணத்தில் இந்த நாளை எனது வாழ்வில் முக்கியமானதாகக் கருதுகிறேன். இவ்வாறு மனுஷ்யபுத்திரன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment