வருமானத்துக்கு அதிகமாக ரூ27.9 கோடி சொத்து குவித்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது சி.பி.ஐ. புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி, சென்னை, திருச்சி, பெரம்பலூர் உட்பட 20 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் தி.மு.க.வைச் சேர்ந்த ஆ. ராசா. இவரது பதவி காலத்தில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது.
இதனால் மத்திய அரசுக்கு ரூ1 லட்சத்து 70 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை அதிகாரி தெரிவித்த தகவல் நாட்டில் பெரும் பிரளயத்தை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் ஆ.ராசா மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. ஓராண்டு காலம் திகார் சிறையில் இருந்த பின்னர் ஜாமீனில் ஆ. ராசா வெளியே வந்தார். இதேபோல் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டிவிக்கு ரூ200 கோடி பணம் கைமாறியது தொடர்பாகவும் ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகள் மீது டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென ஆ. ராசா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து இன்று டெல்லி, சென்னை, திருச்சி, பெரம்பலூர், கோவை உள்ளிட்ட 20 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இது தொடர்பாக சி.பி.ஐ. வெளியிட்ட செய்திக் குறிப்பில், 1999-2010ஆம் ஆண்டு காலத்தில் ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக ரூ27.9 கோடி சொத்து குவித்துள்ளார். இது தொடர்பாக ஆ. ராசா, மனைவி பரமேஸ்வரி உட்பட 17 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் 1, சென்னையில் 6, திருச்சியில் 3, பெரம்பலூரில் 8, கோவையில் 2 இடங்கள் என மொத்தம் 20 இடங்களில் இன்று சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது ஆ.ராசா மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையா சொத்துகள் மற்றும் நிரந்த வங்கி கணக்கு குறித்த விவரங்கள் ஆராயப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூரில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் அப்ரூவராக இருந்த நேரத்தில் திடீரென தற்கொலை செய்து கொண்டவரான, ஆ .ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷாவின் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment