மோடி - ஜெயலலிதா சந்திப்பை பற்றி பொது இடத்தில் கொச்சைப்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் என்பது உண்மையே. உங்களது 50 நிமிட சந்திப்பில் என்ன செய்தீர்கள்? என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கேட்டது எந்த வகையில் நாகரீகமானது என்று தெரியவில்லை. அதை விட, எனக்குத் தெரியும் இந்த வயதில் தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை என்று சிரித்துக் கொண்டும் அவர் கூறியது இன்னும் நாராசமானது.
இந்தப் பேச்சுக்கு எதிர்வினையாக அதிமுகவினர் போராட்டம் நடத்துவதோடு ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உருவபொம்மையை எரித்தனர். இப்படி ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உருவபொம்மையை செருப்பால் அடிப்பதை டிவியில் பார்த்த போதே நெஞ்சு பதை பதைக்கிறதே... உருவ பொம்மையை எரிப்பதா?... நடப்பது ஹிட்லர் ஆட்சியா என்று சந்தேகம் வருகிறது என்று கேட்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. பிரதமர் நரேந்திர மோடி அரசு மரபுகளைப் பற்றிக் கவலைப்படாமல், முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கே சென்று விருந்தில் கலந்து கொண்டது பற்றி, அனைத்துக் கட்சித் தலைவர்களும், ஊடகங்களும் விமர்சனம் செய்ததைப் போல, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் தன்னுடைய கருத்தை வெளியிட்டிருக்கிறார் என்கிறார் கருணாநிதி. கூடவே, இளங்கோவன் தெரிவித்த கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், அ.தி.மு.க. ஆட்சியினர் வழக்கம் போல, "அவதூறு வழக்கு" தொடுக்கலாம், என்று ஐடியாவும் கூறியிருக்கிறார் கருணாநிதி. அந்த ஐடியாவை உடனே செயல்படுத்தியும் விட்டார் முதல்வர் ஜெயலலிதா.
ரசாங்க ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ தலைவர்கள் சந்திக்க நேரிட்டால், அதிலும் ஆண் - பெண் தலைவர்கள் சந்திக்க நேரிட்டால், அவர்களின் உறவுகளைக் கொச்சைப்படுத்தி பேசுவது இன்றைக்கு அதிகரித்து வருகிறது. பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதா இடையேயான சந்திப்பை கள்ள உறவு என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசியது எந்த விதத்தில் நியாயம்? நான் கள்ள உறவு என்று சொன்னது அதிமுக - பாஜக இடையே உள்ள உறவை என்று சொல்லி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் உண்ணாவிரதப்பந்தலில் பேசிய, இளங்கோவனோ, சசிபெருமாள் மரணத்திற்கு ஒரு வார்த்தை வரவில்லை, பேசமுடியவில்லை என்று சொல்கிறார்கள். பின்னென்ன செய்தீர்கள் ஐம்பது நிமிடங்கள் நீங்களும் மோடியும்... தோழர்களே தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம்.... (சிரித்துக்கொண்டே) எனக்குத் தெரியும் இந்த வயதில் தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை என்று சிரித்துக்கொண்டே முடிக்கிறார் இளங்கோவன். இதைக்கேட்ட அதிமுக தொண்டர்களுக்கு கொதிக்காதா? அதிமுகவினர் போராட்டம் நடத்தினால் அதற்காக வரிந்து கட்டிக்கொண்டு எதிர்கட்சியினர் ஒன்றாக இணைந்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பேசுகின்றனர் இது எந்த விதத்தில் நியாயம்.
No comments:
Post a Comment