Latest News

உமி, வைக்கோல் மின்சாரம் - வழிகாட்டும் இலங்கை



மின்சாரம், தமிழகத்தை பொருத்தவரை ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் மக்களை ஏமாற்றவும், தங்களுக்குள்ளே வசைபாடவும் பயன்படுத்தும் ஓர் சொல், இதுவே மத்திய கட்சிகளின் நண்பர்களுக்கு லாபத்தை வாரி வழங்கும் ஒரு தொழில்.

மக்களுக்கோ யார் ஆட்சிக்கு வந்தாலும் இலவசமாக தரப்படும் ஓர் வெற்று வாக்குறுதி மற்றும் நிரந்தர இம்சை.

மின்சாரம் என்பது நீர், அணு, காற்று, கடல் அலை, அனல் என அனைத்து பொருளின் மீதும் உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் எடுக்க எடுக்க குறையாத ஒரு சுரபி. இதை உற்பத்தி செய்து முறைப்படுத்தி விநியோகிக்க தேவை ஒரு மக்கள் நல அரசு என்பதை பாலர் பள்ளி குழந்தையும் அறிந்த ஒன்று.

நமது நாட்டில், நமது மாநிலத்தில் நிலவும் மின் வெட்டு பிரச்சனைகளுக்கு மிக எளிய தீர்வை தருகின்றது நமது அண்டை நாடான இலங்கையில் இயங்கும் ஓர் சிறிய மின் உற்பத்தி நிலையம்.


கத்தார் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் ஷேக் அலி அப்துல்லா அல் சுவைதி என்பாரின் முதலீட்டிலும், நமது சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மற்றும் இரு இலங்கை நிறுவனங்களின் வடிவமைப்பிலும் இந்த மின் ஆலை கட்டமைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் என்ற ஊரில் விவசாய கழிவுப் பொருட்களான உமி, வைக்கோல் மற்றும் எந்த நிலத்திலும் செழித்து வளரும் தன்மையுடைய ஒரு வகை வாகை மரம் ஆகியவற்றை எரிபொருளாக கொண்டு மின்சாரம் தயாரிக்கின்றனர்.


(இந்த மரத்தின் சரியான பெயரை அறியத் தந்தால் திருத்திக் கொள்வோம்)

முன்னெச்சரிக்கையாக சுமார் 5 ஆண்டுகளுக்குத் தேவையான உமி மற்றும் வைக்கோல் சேமித்து வைக்கப்பட்டு, 2009 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு, 2011 ஆம் ஆண்டு 2.5 மெகாவாட் மின் உற்பத்தியுடன் செயற்பாட்டுக்கு வந்த இந்த மின் ஆலை 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் 5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும், 2016 ஆம் ஆண்டுக்குள் நீராவி கொதிகலன்கள் உதவியுடன் 10 மெகாவாட் உற்பத்தி செய்யவும் இந்த மின் ஆலை இலக்கு நிர்ணயித்துள்ளது. 


சுமார் 1000 பேர் நேரடியாகவும் மறைமுகமாவும் வேலைவாய்ப்பை வழங்கி, விவசாய கழிவுப் பொருட்களுக்கும் சந்தை மதிப்பை ஏற்படுத்தி, மாசில்லா சுற்றுச்சூழலுக்கும் வாய்ப்பேற்படுத்தியுள்ளதுடன் வாகை மர தழைகளின் அபரிமித விளச்சலால் கால்நடைகளுக்கு உணவும் தாராளமாக கிடைக்கும் நிலையை இந்த மின் ஆலை திட்டம் ஏற்படுத்தியுள்ளது.

இது ஒருபுறம் செயல்பட, மன்னார் வளைகுடாவை ஒட்டியுள்ள புத்தளம் கடற்கரை பிரதேசங்களில் காற்றாலைகளை நிறுவியும் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றனர்.

அரசு நினைத்தால் மக்களை பங்குதாரர்களாக ஏற்று ஒவ்வொரு விவசாயம் மற்றும் கடற்சார் பிரதேசங்களில் இத்தகைய எளிய ஆனால் பலன் நிறைந்த மின் ஆலைகளை அமைக்கலாம்.

தமிழகத்தில் உமி, வைக்கோலுக்கு தான் பஞ்சமா? அல்லது கடற்கரைகள் தான் இல்லையா?  இதுபோன்ற சிறு சிறு மின் உற்பத்தி ஆலைகளை நிறுவினாலேயே காலப்போக்கில் மின்மிகை மாநிலமாக மாறலாம். மாறுமா? தன்னலமற்ற மக்கள் தலைவர்கள் கிடைப்பார்களா?

நம்பிக்கையுடன்
அதிரை அமீன்

படங்கள்: ஜமால்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.