Latest News

சத்தியமூர்த்தி பவன் தாக்குதல்! ஆளும் கட்சியின் பாசிச வெறியாட்டம் - வைகோ கண்டனம்


தமிழ்நாட்டை ஆளும் அண்ணா தி.மு.க. வின் கடந்த ஓராண்டு கால அராஜக நடவடிக்கைகள் பாசிச அடக்குமுறையை நோக்கி தமிழகத்தை இட்டுச் செல்கின்றன என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஆளும் கட்சி எம்.பி. உள்ளிட்ட குண்டர்களைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்ணா தி.மு.க.வினர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் உருவ பொம்மைகளை எரித்தும், அவரது உருவப் படங்கள் மீது செருப்பாலும், துடைப்பக்கட்டையாலும் அடித்தும் நடத்திய வன்முறை வெறியாட்டத்தைத் தொலைக்காட்சியில் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். தமிழக முதல்வர் - இந்தியப் பிரதமர் சந்திப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் செய்த விமர்சனத்தை அரசியல் ரீதியாக மறுப்புக்கூறியோ அல்லது கண்டனம் தெரிவித்தோ தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் உரிமை ஆளும் கட்சிக்கு உண்டு. ஆனால், அதைவிடுத்து காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அவர்களின் உருவப் படங்களையும், உருவ பொம்மைகளையும் காலால் மிதித்தும், காலணியால் அடித்தும் இன்னும் அச்சில் ஏற்ற முடியாத அருவறுக்கத்தக்க வகையில் ஆளும் கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளில் இருப்போரே தலைமை தாங்கி அராஜகத்தில் ஈடுபட்டது, தமிழத்தின் ஆளும் கட்சியைத் தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அபாய அறிவிப்பாகும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் கட்டட முகப்பில் வைக்கப்பட்டிருந்த அக்கட்சியின் பெயர்ப் பலகையை உடைத்ததோடு, கட்டடத்துக்கு உள்ளே கற்களையும், சோடா பாட்டில்களையும் ஆளும் கட்சி ரவுடிகள் வீசி உள்ளனர். ஆளும் கட்சியினர் நடத்திய அனைத்து வன்முறை வெறியாட்டங்களையும் தடுப்பதற்கு உரிய எந்த நடவடிக்கையும் காவல்துறை மேற்கொள்ளவில்லை. பல இடங்களில் நகரங்களில் பிரதான இடங்களில் உருவ பொம்மை எரிப்பு நடந்தபோதும்கூட அந்த இடங்களில் ஒரு காவலர்கூட கண்ணுக்குத் தென்படவில்லை. இதிலிருந்து ஒரு உண்மை வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. முதல்வரின் நேரடி கட்டளையின் பெயரிலேயே காவல்துறையின் கரங்கள் கட்டப்பட்டு, ஆளும் கட்சியின் அராஜக வெறியாட்டம் அரங்கேறியுள்ளது. அதிலும் சத்தியமூர்த்தி பவன் தாக்குதலுக்கு அதிமுகவின் நாடாளுமன்ற மாநிலங்களவை குழுவின் தலைவரே குண்டர் கூட்டத்துக்குத் தலைமையேற்று செயல்பட்டுள்ளார். அரசியல் கட்சிகளின் அலுவலகங்களை வேறு கட்சியினர் தாக்க முற்படுவது மிகப்பெரிய விபரீதத்துக்கு வழி வகுக்கும். முன்னர் ஒருமுறை பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகமான கமலாலயத்தை அன்றைய ஆளும் கட்சியினர் தாக்கியபோது, கூட்டணி உடன்பாடு இல்லாதபோதும் நானும், மறுமலர்ச்சி தி.மு.க. தோழர்களும் கமலாலயத்தில் இருந்த பாஜகவினரை பாதுகாக்கச் சென்றோம். ஆனால், சில நாட்களுக்கு முன்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமாக தாயகத்தை முற்றுகையிடப்போவதாகச் சொல்லி முறையான ஒரு அமைப்பே இல்லாத சிவசேனை கட்சியின் ராதாகிருஷ்ணன் பிரிவு அறிவித்தபோது, சென்னை மாநகரத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்குக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ள இடங்களில் இல்லாததும், இஸ்லாமிய சகோதரர்கள் நடத்தும் உணவு விடுதிக்கு அருகாமையில் உள்ள இடத்தில் என்னை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதித்ததாக, ஆளும் கட்சிக்கு ஆதரவான ஜெயா தொலைக்காட்சியிலேயே இந்த ஈனச் செயலில் ஈடுபட முயன்ற சிலர் கூறினர். நான் மேலே குறிப்பிட்ட அந்த நபர்கள் தாயகம் அமைந்துள்ள சாலையில் வர முயன்றபோது, அவர்களில் ஒருவருக்கு பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திக்கொண்டு ஒரு காவலரும் உடன் வந்தார். இன்னொருவரிடம் துப்பாக்கி இருந்ததைக் கண்ட கழகத் தோழர்கள் அவர்களை நோக்கிச் சென்றவுடன், அவர்கள் அங்கிருந்து காரில் ஏறி ஓடிவிட்டனர்.


கலிங்கப்பட்டியில் என் தாயார் மாரியம்மாள் அவர்களும், ஏராளமான தாய்மார்களும், பொதுமக்களும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அமைதி வழியில் அறப்போராட்டம் நடத்தினர். டாஸ்மாக் கடையை அகற்றுமாறு நான் கூறியதன்பின் என் வேண்டுகோளை ஏற்று அறப்போராட்டத்தினர் கலைந்து சென்றனர். ஆனால் மறுநாள் காலையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினரைக் கொண்டுவந்து குவித்து கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை திறந்து வைத்தனர். பிற்பகலில் கடையை மூடச் சொல்லி, டாஸ்மாக் கடையை நோக்கி நாங்கள் சென்றபோது, காவல்துறையினர் தடியடி நடத்தினர். நானும் என் தம்பி இரவிச்சந்திரனும் தாக்கப்படுவதைக் கண்டு பொதுமக்கள் நியாயமான ஆத்திரத்துக்கு ஆளாகி, டாஸ்மாக் கடையை உடைத்து நொறுக்கினர். நான் பிரச்சார வேனில் ஏறி நின்று கவாலர்களை நோக்கிச் செல்ல வேண்டாம் என்று வாலிபர்களையும், பொதுமக்களையும் கண்டித்துப் பேசி அமைதி நிலை நாட்டப்பட்ட பிறகு, திடீரென்று காவல்துறையினர் முன்னேறி வந்து கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். அதில் ஆறு குண்டுகள் வேன் மீது நின்றுகொண்டிருந்த என்னை நோக்கியே வீசப்பட்டதையும், அதை கழகத் தோழர்கள் நாற்காலிகளைக் கொண்டு தடுத்ததையும், நாற்காலிகள் உடைந்து சிதறியதையும், ஒரு கண்ணீர்ப்புகைக் குண்டு வெடித்ததில் வேனுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த என் தம்பியின் வலதுகால் ஆடு தசையில் பலத்த காயம் ஏற்பட்டதையும் அங்கிருந்தவர்கள் அனைவரும் அறிவார்கள். இதனையடுத்து எந்தக் காரணமும் இன்றி காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் மூன்றுமுறை சுட்டார்கள். அடுத்து என் மீதும், தோழர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்போகிறார்கள் என்பதை உணர்ந்த நான், என்னைச் சுடுங்கள் என்று வேன் மீது நின்றவாறு கூறினேன். மனிதநேயமுள்ள இரண்டு காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தவிடாமல் தடுத்தார்கள். பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, காவல்துறையினரைக் குவித்து கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையைத் திறக்கச் சொன்னது முதலமைச்சர்தான். பிற்பகல் மூன்றரை மணிக்கு அந்தக் கடை நொறுக்கப்பட்டது என்ற செய்தியைக் கேட்டு, என் மீதும், கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தச் சொல்லி யாரால் கட்டளையிட முடியும் என்பதை பொதுமக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். தற்போது காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் விதத்தில் தாக்குதல் நடத்தும் திட்டத்தின் முன்னோட்டமே நேற்றைய வன்முறை நிகழ்ச்சிகளாகும் எனக் குற்றம் சாட்டுகிறேன். இன்று மீண்டும் சத்தியமூர்த்தி பவனை நோக்கி 300க்கும் மேற்பட்டவர்கள் சென்று இளங்கோவனின் உருவபொம்மையை எரித்ததோடு, இளங்கோவனையும் உயிரோடு எரிப்போம், எங்கள் புரட்சித் தலைவி அம்மாவை யார் எதிர்த்தாலும் அவர்களையும் கொளுத்துவோம் என்று திரும்பத் திரும்ப தென்சென்னை மாவட்ட அண்ணா தி.மு.க. தொழிற்சங்க தலைவர் அர்ஜூனன் என்பவரும், அண்ணா தி.மு.க.வினரும் கூச்சலிட்டதை புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில் கண்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன்.

அதிகார போதையில் முதல்வர் ஆளும் கட்சினரையும், காவல்துறையினரையும் பயன்படுத்தி ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க முற்பட்டுள்ளார். ஜெர்மனியில் அடால்ஃப் ஹிட்லர் தனது நாஜி கட்சியின் பழுப்பு வண்ண உடை குண்டர்களை கம்யூனிஸ்டுகள் மீதும், எதிர்க்கட்சியினர் மீதும் தாக்குதல் நடத்த ஏவியதுதான் நினைவுக்கு வருகிறது. தமிழகத்தின் பொது அமைதியைக் குலைத்து, ஆளும் கட்சியின் வன்முறை மூலம் எதிர்க்கட்சிகளை நசுக்கிவிடலாம் என்ற பாசிச மனப்பான்மையுடன் தமிழ்நாட்டு காவல்துறையினரின் கைகளையும் முதல்வர் கட்டிப்போட்டுவிட்டார். முதல்வரின் இத்தகைய அபாயகரமான போக்கை அனைத்து அரசியல் கட்சிகளும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். நேற்றைய வன்முறையில் ஈடுபட்ட ஆளும் கட்சி எம்.பி. உள்ளிட்ட குண்டர்களைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விநாச கால விபரீத புத்தி என்ற சொற்றொடரை முதல்வருக்கு ஞாபகப்படுத்துகிறேன்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.