இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி 14 இடங்களைக் கைப்பற்றி அந்நாட்டின் 3வது பெரிய கட்சியாக தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வாக்குகள் நேற்று இரவு முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சிங்களர் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவையும் வேட்பாளர்களை நிறுத்தின.
இருப்பினும் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை இடங்களை தமிழ் தேசக் கூட்டமைப்பே கைப்பற்றியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் மொத்தம் உள்ள 7 இடங்களில் 5; வன்னியில் உள்ள 6-ல் 4 ஐ தமிழ் தேசக் கூட்டமைப்பு வென்றுள்ளது. இதேபோல் மட்டக்களப்பில் 3 இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. திருகோணமலை, அம்பாறையில் தலா 1 இடத்தில் இக்கூட்டமைப்பு வாகை சூடியுள்ளது. மொத்தம் 14 இடங்களைக் கைப்பற்றி தமிழ் தேசக் கூட்டமைப்பு இலங்கை நாடாளுமன்றத்தின் 3வது மிகப் பெரிய அரசியல் கட்சியாக உருவாகியுள்ளது. மேலும் கூட்டமைப்பு பெற்றிருக்கும் வாக்குகளின் அடிப்படையில் 1 அல்லது 2 எம்.பி.க்கள் கூடுதலாக கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 15 அல்லது 16 எம்.பி.க்கள் இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment