விழுப்புரம் அருகே சேஷசமுத்திரத்தில் இருபிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, நூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டுள்ளனர். அப்பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் மாலதி 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ளது சேஷசமுத்திரம் கிராமம். இங்குள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த 2012 ஆம் ஆண்டு தேர் திருவிழா நடந்தது. அப்போது, தேர் திருவிழா நடத்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த, இரு ஆண்டுகளாகத் தேர் திருவிழா நடைபெறவில்லை.
இந்நிலையில், இந்தாண்டு நாளை தேர் திருவிழா நடத்த ஒரு பிரிவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சியில் ஆர்.டி.ஓ., தலைமையிலும், சங்கராபுரத்தில் தாசில்தார் தலைமையிலும் அமைதி கூட்டம் நடந்தது.போலீஸ் பாதுகாப்போடு தேர் திருவிழா நடத்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், மாரியம்மன் கோவில் தேர் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அப்போது அங்கு வந்த எதிர் தரப்பினர் தேர் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இதில் தேர் தீப்பற்றி எரிந்தது. இதனால், அங்கு இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது 6 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. கலவரத்தைக் கட்டுப்படுத்த, போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். விழுப்புரம் எஸ்.பி., நரேந்திரன் நாயர் மற்றும் அதிரடிப்படை போலீசார் சேஷசமுத்திரம் கிராமத்திற்கு வந்தனர். அப்போது எஸ்.பி., மீது கலவர கும்பல் பெட்ரோல் குண்டு வீசியது. இதில், எஸ்.பி., நரேந்திரன் நாயர் மீது பெட்ரோல் குண்டு விழுந்ததால் அவரது பேண்ட், சட்டை தீப்பிடித்து எரிந்தது. உடனிருந்த போலீசார், விரைந்து செயல்பட்டு எஸ்.பி. மீது பற்றிய தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
மேலும், போலீசார் மீது கலவரக்காரர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதில் 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து தடியடி நடத்தி போலீசார் கும்பலைக் கலைத்தனர். தொடர்ந்து, கலவரக்காரர்கள் தீயணைப்பு வாகனங்கள் மீதும் பெட்ரோல் குண்டுகள், கற்கள் வீசியதால் வாகனங்கள் உள்ளே செல்ல வழியின்றி பாதி வழியிலே நின்றன. நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதனைத் தொடர்ந்து நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சேஷசமுத்திரம் கிராமம் இருளில் மூழ்கியது. கலவர பூமியாக மாறியுள்ள சேஷசமுத்திரத்தில், எஸ்.பி., நரேந்திரன் நாயர் தலைமையில் ஆயிரக் கணக்கான போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment