நாட்டின் 69-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமை செயலக கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை கொடி ஏற்றி வைத்தார். அதன் பின்னர் அப்துல்கலாம் விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். நாட்டின் சுதந்திரதின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
தமிழக அரசின் சார்பில் சென்னை கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. முதலில் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த போர் வீரர்களின் நினைவிடமான சென்னை கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் முதல்வர் ஜெயலலிதா. போர் நினைவுச் சின்னத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஜெயலலிதா புனித ஜார்ஜ் கோட்டையின் நுழைவு வாயிலை காலை 8.45 மணியளவில் வந்தடைந்தார். அவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் வரவேற்றார். இதன்பின், முப்படைகளின் தென் பிராந்தியத் தலைவர்கள், தமிழக டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை முதல்வருக்கு மரபுப்படி அறிமுகம் செய்து வைத்தார் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன். இதன் பின் முப்படையினரின் மற்றும் காவல் துறையினரின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் திறந்த ஜீப்பில் காவல் துறையின் அணிவகுப்பை பார்வையிட்டு கோட்டை கொத்தளத்துக்குச் சென்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.
சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார். இதைத்தொடர்ந்து பல்வேறு விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். தமிழகத்தில் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில், மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இஸ்ரோ திட்ட இயக்குநர் வளர்மத்திக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
உட்கார்ந்தபடியே...
சட்டசபையிலும் பொதுக்கூட்டங்களிலும் நின்றபடி உரையாற்றும் முதல்வர் ஜெயலலிதா இன்று நாற்காலியில் உட்கார்ந்தபடியே உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment