மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பது ஏதோ தி.மு.க.விற்கு திடீரென்று ஏற்பட்ட எண்ணம் அல்ல என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2011ல் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்திருந்தால் நிச்சயம் மதுவிலக்கை தலைவர் கலைஞர் அமல்படுத்தியிருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது.. "தி.மு.க. ஆட்சிக்கு மீண்டும் வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்" என்று தலைவர் கலைஞர் அறிவித்துள்ளார். அரசே டாஸ்மாக் கடைகளை திறந்து விற்பனை செய்யும் கொள்கையை அ.தி.மு.க. அரசு தான் 2003-ஆம் ஆண்டு கொண்டு வந்தது. அந்த வகையில் எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள் என்ற நிலை உருவாகி விட்டது. அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையை விட "டாஸ்மாக் கடைகள்" எண்ணிக்கை அதிகமாகி விட்டது. இன்றைய தினம் கேரள மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு ஒரு மதுக்கடை இருக்கிறது என்றால் தமிழகத்தில் 10,000 பேருக்கு ஒரு டாஸ்மாக் கடை என்ற அவல நிலை அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் ஏற்பட்டு விட்டது. மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பது ஏதோ தி.மு.க.விற்கு திடீரென்று ஏற்பட்ட எண்ணம் அல்ல. கடந்த முறை ஆட்சியிலிருந்த போதே "இனிமேல் புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க மாட்டோம்" என்று தலைவர் கலைஞர் அறிவித்தார். பிறகு பொதுமக்கள் நடமாடும் இடங்களான பள்ளிக்கூடங்கள், கோயில்கள், பேருந்து நிலையங்கள் போன்ற பகுதிகளில் இருந்த 1300 பார்களையும், 132 டாஸ்மாக் கடைகளையும் மூடினார்.
எல்லாவற்றிற்கும் மேலாக 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் "இனிமேல் டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்கு மேல் திறந்து இருக்காது" என்று ஒரு மணி நேரம் டாஸ்மாக் கடையின் விற்பனையை மூட சொல்லி உத்தரவிட்டவர் தலைவர் கலைஞர் தான். 2011ல் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்திருந்தால் நிச்சயம் மதுவிலக்கை தலைவர் கலைஞர் அமல்படுத்தியிருப்பார். ஆகவே மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று இப்போது தி.மு.க. வெளியிட்டுள்ள அறிவிப்பு 2016ல் நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும். தாய்மார்களின் கண்ணீர் துடைக்கப்படும். குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் என்ற இளைய சமுதாயத்தினருக்கு வளமிக்க எதிர்காலம் உருவாக, மதுப்பழக்கத்தை அறவே ஒழிக்க அடுத்து அமையப் போகும் கழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். "மதுவின் மூலம் வரும் வருவாய்" மட்டுமே முக்கியமல்ல. மக்களின் நலன், சமூக மாற்றம், மாணவர்கள், தாய்மார்களின் நலன் போன்றவை அதைவிட முக்கியம். குறிப்பாக தாய்மார்களின் வேதனையைப் போக்குவது திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்து வைக்கும் "மதுவிலக்கு அமல்படுத்துவோம்" என்று புதிய அத்தியாயத்தின் உன்னத நோக்கம். அந்த நோக்கம் சீரிய முறையில் செயல்பட, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதுமே "சொன்னதைச் செய்த" கழகம். அந்த வகையில் மதுவிலக்கை அமல்படுத்தி, 2016-ல் செயல்வடிவம் கொடுப்போம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment