சட்டவிரோத டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சி.பி.ஐ. தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 23-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது. இம்மனு திங்கள்கிழமையன்று விசாரணைக்கு வர வேண்டியது. ஆனால் விசாரணைக்கான பட்டியலில் சேர்க்கப்படாதது குறித்து சி.பி.ஐ. வழக்கறிஞர் சீனிவாசன் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக 2004-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2007-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை தயாநிதி மாறன் பதவி வகித்தார். அப்போது அவர் அதிகத் திறன் வாய்ந்த தொலைபேசி இணைப்புகளை தனது சென்னை போட் கிளப் இல்லத்தில் இருந்து, தனது சகோதரர் கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் தொலைக்காட்சி அலுவலகம் வரை பூமிக்கு அடியில் கேபிள்கள் அமைத்து சட்டவிரோதமாக இணைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி கடந்த ஜூன் 29ம் தேதி தயாநிதிமாறனுக்கு சம்மன் அனுப்பியது சிபிஐ. ஏற்கெனவே இந்த வழக்கில் கண்ணன், ரவி, கௌதமன் என சன் டி.வி ஊழியர்கள் கைது செய்யப்பட்டதால் தாமும் கைது செய்யப்படலாம் என்று அஞ்சிய தயாநிதிமாறன், சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 வார இடைக்கால முன்ஜாமீன் பெற்றார். தயாநிதி மாறனுக்கு முன் ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும். அப்படி ஒத்துழைக்காத நேரத்தில், அவருடைய முன் ஜாமீனை ரத்து செய்வது தொடர்பாக நீதிமன்றத்தை சி.பி.ஐ. அணுகலாம் என்று தெரிவித்திருந்தது. இதனிடையே கடந்த 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை தயாநிதி மாறனிடம் டெல்லியில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்களை அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தயாநிதி மாறனின் முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 16-ந் தேதியன்று மனு தாக்கல் செய்துள்ளனர். இம்மனு திங்கள்கிழமையன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால் வரவில்லை. இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ. தாக்கல் செய்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என சி.பி.ஐ. வழக்கறிஞர் சீனிவாசன் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (ஜூலை 23)-ந் சி.பி.ஐ. மனு மீது விசாரணை நடைபெறும் என்று நீதிபதி சுப்பையா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment