Latest News

மின்சார சட்டத்தில் புதிய திருத்தங்களை அமல்படுத்தினால் பேரபாயம் நேரிடும்.. கருணாநிதி எச்சரிக்கை


லாப நோக்கம் ஒன்றையே தலையாயதாகக் கருதிடும் தனியார் மயத்தை ஊக்குவிக்கும் மின்சார சட்டத்தில் புதிய திருத்தங்களைத் தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். மின்சாரச் சட்டம், 2003 மற்றும் 2014 ல் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்படும் நிலையில் பெரும் அபாயங்கள் நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது.. ''135 கோடி மக்கள் தொகை கொண்ட சீன நாடு, ஆண்டுக்கு 12 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து, உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது. 31 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்க நாடு ஆண்டுக்கு 11 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து, இரண்டாவது இடத்தில் உள்ளது. 13 கோடி மக்கள் தொகை கொண்ட ஜப்பான் நாடு, 3 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால், இந்தியாவிலோ மக்கள் தொகை 123 கோடி; மின் உற்பத்தியோ 2.6 இலட்சம் மெகாவாட் தான். சீனா போன்ற நாடுகளில் அனைத்து மக்களும் மின்சாரத்தின் பலன்களை முழுமையாக அனுபவித்து வரும் நிலையில், நமது இந்தியத் திருநாட்டில் விடுதலை பெற்ற 68 ஆண்டுகளுக்குப் பின்னரும், மொத்த மக்கள் தொகையில் சுமார் 30 கோடி மக்கள் மின்சாரம் என்றால் என்ன என்றே தெரியாத நிலை இருப்பது பெரிதும் வருந்தத்தக்கதாகும். 
இப்படிப்பட்ட பின் தங்கிய நிலையில் மின்சாரச் சட்டம் 2003 ல் திருத்தம் செய்திட 19-12-2014 ல் இந்திய நாடாளுமன்றத்தில் மின்சாரச் சட்டம் 2014 என்ற புதிய சட்டத்தை மத்திய பாஜக அரசு அறிமுகம் செய்துள்ளது. அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு, அந்தக் குழுவும் 5-5-2015 அன்று தனது 12 வகையான பரிந்துரைகளுடன் அறிக்கை வழங்கியுள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகள் அப்படியே நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமானால், பொது மக்கள், வணிகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்து இந்தியா முழுதும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. 
மின்சாரச் சட்டம், 2003 மற்றும் 2014ல் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்படும் நிலையில் ஏற்படும் அபாயங்கள் பின்வருமாறு :- 
1. மின் விநியோகம் முழுவதும் தனியார் கைகளுக்குச் சென்று விடும். ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள மின்வாரியத்தின் கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு மின்சாரத்தைக் கொண்டு செல்லவும், பகிர்மானம் செய்யவும் முதலீடு எதுவுமின்றி தனியார் முயற்சிகள் செய்வதற்கு ஏதுவாகும். 
2. தனியார் மின் நிறுவனங்களுக்கு ஏற்படும் நட்டத்தை அரசு நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ளுமென்று இந்தப் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது பேரபாயத்தை ஏற்படுத்தக் கூடியது.
 3. விவசாயிகளுக்குப் பல்லாண்டு காலமாக வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம், குடிசைகளுக்கும், கைத்தறிகளுக்கும், விசைத்தறிகளுக்கும் வழங்கப்படும் இலவச மின்சாரம் போன்றவை முற்றிலுமாக நிறுத்தப்படும் அபாயம் உள்ளது.
 4. மின்சாரத்திற்கு பல மாநிலங்களிலும் வழங்கப்பட்டு வரும் மானியம் நிறுத்தப்பட்டு விடும்.
 5. மின்துறை தனியார் மயமாவதால் நுகர் பொருள்களின் விலைவாசி மேலும் கடுமையாக உயர்ந்து விடும்.
 6. தற்போது பணியாற்றி வரும் பல இலட்சக்கணக்கான மின்சார ஊழியர்கள், படிப்படியாகத் தங்களுடைய பணியையும் அதனைத் தொடர்ந்து தங்களுடைய வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்திட வேண்டிய பரிதாபமான நிலை தோன்றிவிடும். 
7. மாநில அரசுகள் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்திற்கும் தனியார் துறைகளையே சார்ந்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படும். 
8. எல்லாவற்றுக்கும் மேலாக தற்போது மத்திய, மாநில அரசுகளின் கூட்டு அதிகாரத்தின் கீழ் இருந்து வரும் மின்சாரம் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டதற்குப் பிறகு மத்திய அரசே மேலாண்மை செய்யும் அதிகாரம் ஏற்பட்டு விடும். அதன் மூலம் மாநில உரிமைகள் பெரிதும் பாதிக்கப்படும். பிரதமர் மோடி அவர்கள் முதலமைச்சராக இருந்த பாஜக. ஆட்சியின் கீழ் உள்ள குஜராத் மாநிலம் உள்ளிட்ட பல மாநிலங்கள் புதிய மின்சாரச் சட்டத்தை எதிர்த்தே கருத்து வெளியிட்டுள்ளன. 
மின்சாரச் சட்டத் திருத்த மசோதா 2014 ஐத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள மின் ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யவும் ஆர்ப்பாட்டம் நடத்திடவும் குரல் கொடுத்துள்ளனர். எனவே இந்தியப் பேரரசு, மாநில உரிமைகளைப் பாதித்து, மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கு குந்தகம் ஏற்படுத்தி பல லட்சம் மின்சார அலுவலர்களை வேலையிழக்கச் செய்து, லாப நோக்கம் ஒன்றையே தலையாயதாகக் கருதிடும் தனியார் மயத்தை ஊக்குவிக்கும் புதிய சட்டத் திருத்தங்களைத் தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே பல ஆண்டுகளாக இருந்துவரும் மின்சாரக் கட்டமைப்புகளில் எந்தவிதமான அடிப்படை மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், அனைத்து மக்களுக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைத்திடவும், வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ச்சியாகப் பெருகிடவும், மின்உற்பத்தி மேலும் பன்மடங்கு ஏற்படவும் வழி வகைகள் செய்வது தொடர்பாகச் சிந்தித்து ஆக்கப் பூர்வமாகச் செயலாற்ற வேண்டும்'' இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.