டெல்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவை கைவிட்டு விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை தேவை என்றும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நாடாளுமன்ற வளாகத்தில் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம், நிலம் கையகப்படுத்தும் மசோதா உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து பேசியதாக தெரிகிறது.
அரைமணிநேரம் நீடித்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடியின் மிகச்சிறந்த நண்பன் நான் என்றார். 14 மாதங்களுக்குப் பின்னர் பிரதமர் மோடியை சந்திக்கிறேன். அவரிடம் நான் பல கோரிக்கைகளை வலியுறுத்தினேன். முக்கியமாக தென்னக நதிகளை இணைக்க வேண்டும். விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். நிலம் கையகப்படுத்தும் மசோதா அமல்படுத்தப்பட்டால் விவசாயிகள் அழிந்து விடுவார்கள். ஆந்திராவில் 20 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். தனது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் கூறியுள்ளார். இந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமான அமைந்தது என்று வைகோ கூறினார்.
பிரதமர் மோடியிடம் வைகோ அளித்த கோரிக்கை மனு:
2015 ஏப்ரல் 7 ஆம் நாள், ஆந்திர மாநிலம் செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்புக் காவல்படையும், ஆந்திர மாநில வனத்துறையும் சேர்ந்து, 20 தமிழர்களை ஈவு இரக்கம் இன்றிப் படுகொலை செய்ததை, நெஞ்சைத் துளைக்கின்ற வேதனையோடு தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். கொல்லப்பட்டவர்களுள் 13 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர்கள்; 7 பேர் தாழ்த்தப்பட்ட மலைவாழ் பழங்குடிகள். வறுமையின் விளிம்பில் உழல்கின்ற இவர்கள், அன்றாடப் பிழைப்பிற்காகப் பல பகுதிகளுக்கும் சென்று வேலை செய்து வருபவர்கள்.
அப்பட்டமான கொலை
கடந்த ஏப்ரல் 7 ஆம் நாள், ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய பகுதியில் பேருந்தில் சென்று கொண்டு இருந்த இவர்களை, ஆந்திரக் காவல்துறையினர் பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி, காட்டுக்குள் இழுத்துச் சென்று, ஈவு இரக்கம் இன்றி மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்து சுட்டுக் கொன்று, உடல்களைக் காட்டுக்குள் வீசி எறிந்துள்ளனர். ஆனால், அந்தத் தொழிலாளர்கள் தங்களைத் தாக்க முயன்றதாகவும், தற்காப்புக்காக அவர்களைச் சுட்டுக் கொன்றதாகவும் அப்பட்டமான கட்டுக்கதையை அரங்கேற்ற முயன்று வருகின்றனர்.
சாட்சியங்கள் பதிவு
பல்வேறு மனித உரிமை அமைப்புகள், குறிப்பாக மனித உரிமைகள் வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் தலைமையில் இயங்கி வருகின்ற தமிழகத்தின் மக்கள் கண்காணிப்பகம், படுகொலைகள் நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று ஆய்வு செய்தனர். நடந்தது படுகொலைகள் என்ற உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தனர். கொல்லப்பட்டவர்களோடு பயணித்து, காவல்துறையின் பிடியில் சிக்காமல் தப்பித்து வந்த பாலச்சந்திரன், சேகர் ஆகிய இரண்டு சாட்சிகளை, ஏப்ரல் 13 ஆம் நாள் டெல்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பு நிறுத்தி, சாட்சியங்களைப் பதிவு செய்தனர்.
20 தமிழர்கள் படுகொலை
20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்ட இடத்தில் இருந்து தப்பி வந்த இளங்கோ, புதுச்சேரியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களில் இருந்த காயங்களை வைத்து, அவர்கள் மிகக் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. அவர்களுடைய உடல் உறுப்புகளை வெட்டியும், கண்களைத் தோண்டியும், நாக்குகளை அறுத்தும் மிகக் கொடூரமாக வதைத்துள்ளனர். அதனால் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்து உள்ளனர். ஆனால் உடல்களைக் கொண்டு வந்த காவல்துறையினர், சாட்சியங்களை அழிக்கின்ற நோக்கத்தில், உடல்களை உடனடியாக எரிக்க வேண்டும் என்று மிரட்டி எரிக்கச் செய்துள்ளனர்.
மறு பிரேத பரிசோதனை
உறவினர்கள் மற்றும் ஊராரின் எதிர்ப்பு காரணமாக, ஆறு உடல்கள் மட்டும் எரிக்கப்படவில்லை. அவற்றை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால், ஆந்திர மாநில மருத்துவர்களைக் கொண்டு மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால், இதுநாள் வரையிலும் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளும் வெளியிடப்படவில்லை.
தேசிய மனித உரிமைகள் ஆணையம்
மனித உரிமைகளை ஆயிரம் அடி ஆழத்தில் புதைக்கின்ற வகையில் இந்தப் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. எனவே, அனைத்துச் சான்றுகளையும் ஆய்வு செய்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், இந்தப் படுகொலைகள் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும்; கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இடைக்கால உதவியாக தலா எட்டு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அறிவித்தது.
சி.பி.ஐ.விசாரணைக்குத் தடை
ஆந்திர மாநில அரசு, ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை பெற்றுள்ளது. எந்தவிதமான என்கவுண்டரும் நடக்கவில்லை; நடந்தது அப்பட்டமான படுகொலை என்பதற்கு ஏராளமான ஆவணச் சான்றுகள் உள்ளன. உண்மை இல்லை என்றபோதிலும், அந்தத் தொழிலாளர்கள் செம்மரம் கடத்துவதற்காக வந்தார்கள் என்பதை வாதத்திற்காக ஒப்புக் கொண்டாலும்கூட, அவர்களைச் சுட்டுக் கொல்வதற்குக் காவல்துறைக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
நீதித்துறையின் நம்பகத்தன்மை
அரசியல் சட்டத்தின் 21 ஆவது பிரிவின்படி, ஒவ்வொரு குடிமகனின் உயிருக்கும், மனித உரிமைகளுக்கும் வழங்கப்பட்டு இருக்கின்ற பாதுகாப்பினை, ஆட்சியாளர்கள் புறந்தள்ளி விட முடியாது. நீதித்துறையின் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் வகையில், மிகவும் கவலைக்குரிய இந்தப் படுகொலைகள் குறித்து, சிபிஐ விசாரணை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைத் தாங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
No comments:
Post a Comment