தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக பிரேமலதா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பு ஆகஸ்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2005ம் ஆண்டு மதுரையில் தேமுதிக தொடங்கப்பட்ட போது, அக்கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார் ராமுவசந்தன். 2009ம் ஆண்டு அவர் திடீரென மரணமடைந்தார். ராமுவசந்தன் மறைவுக்குப் பின்னர் பொதுச்செயலாளர் பதவி காலியாகவே இருந்தது. இதனையடுத்து தலைவர் விஜயகாந்தே, பொதுச்செயலாளர் பதவியையும் கவனித்து வருகிறார். சமீபத்தில் 6 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியும் ராமுவசந்தனுக்கு அனுசரிக்கப்பட்டது. அப்போதே விஜயகாந்த் மனதில் ஒரு எண்ணம் தோன்றியதாக தெரிகிறது.
பொதுச்செயலாளர் பதவி தேமுதிகவில் தற்போது முக்கிய முடிவுகளை எடுப்பதில் பங்கு வகிக்கும் பிரேமலதாவிற்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட இருக்கிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 25ல் பிறந்தநாள் கொண்டாட இருக்கும் விஜயகாந்த் அப்போது இந்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிறந்தநாள் பொதுக்கூட்டம் தனது பிறந்தநாளை ஆகஸ்ட் தொடங்கி நவம்பர் வரை மாவட்டம்தோறும் கொண்டாட முடிவு செய்துள்ளார் விஜயகாந்த். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே இருப்பதால் பிறந்தநாளை முன்வைத்து மாவட்டந்தோறும் நலத்திட்ட உதவிகளை கொடுக்கும் வகையில் பொதுக்கூட்டங்களை கூட்டத் திட்டமிட்டுள்ளாராம்.
மாவட்டந்தோறும் கூட்டம் ஆகஸ்ட் 20ம்தேதி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் முதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 26ம் தேதி திருச்சியிலும், 27ம் தேதி கரூரிலும் கூட்டம் நடைபெற உள்ளது. நவம்பர் வரை இதுபோன்ற கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்தி மக்களை சந்திக்க இருக்கிறார் விஜயகாந்த், கூடவே பிரேமலதாவும் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தை சட்டசபைத் தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளில் பிரேமலதா முக்கிய பங்கு வகிக்கவேண்டும் என்று விரும்பும் விஜயகாந்த், தனது மனைவிக்கு கட்சியில் பொதுச்செயலாளர் பதவி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பாஜகவில் தமிழிசை சவுந்தரராஜன் போல தனது மனைவி பிரேமலதாவை அரசியலில் முக்கிய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்பது விஜயகாந்தின் திட்டமாம்.
No comments:
Post a Comment