நோய்களின் கற்பனைகளும், உடல் நலத்துக்கான வழிகளும்' என்ற தலைப்பில் சென்னை, ரஷ்யன் கலாச்சார மையத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. சர்வதேச தமிழ் தாவர உணவாளர்கள் சங்கம் மற்றும் சர்வதேச தாவர உணவாளர்கள் சங்கம் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சிறப்பு விருந்தினராக அமெரிக்காவைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர் டாக்டர். தாமஸ் லோடி கலந்து கொண்டார். இவர் தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகருக்கு அருகில் இயற்கை முறை புற்றுநோய் மருத்துவமனையை நடத்தி வருகிறார். புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களை இயற்கையான காய்கறிகளை சாப்பிட சொல்லியும், இயற்கை முறை பயிற்சிகளாலேயும் நோயை தடுத்தும், குணப்படுத்தியும் உள்ளார். இந்தமுறையில் 2 ஆயிரம் புற்று நோயாளிகளை காப்பாற்றியுள்ளார்.
இயற்கையோடு இணைந்து வாழ்தல், அளவறிந்து உண்ணுதல் மூலம் உடலுக்கான ஆற்றலை பெற முடியும் என்கிறார் தாமஸ் லோடி. கூட்டத்தில் அவர் பேசும்போது, "இயற்கையின் இயல்பே நல்ல உடல்நலத்தோடு இருப்பதுதான். உடலிலிருந்து கழிவுகளை நீக்கி கொண்டே வந்தால், உடலுக்கான ஆற்றல் தானாகவே வளரும். நீங்கள் நினைப்பது போன்று புற்றுநோய் என்பது பரம்பரையாகவோ, கிருமிகளாலோ வருவதில்லை. தவறான உணவுப் பழக்கத்தினாலும், மனம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளாலேயே வருகிறது. உடலிலுள்ள விஷத்தையும், மனத்திலுள்ள விஷத்தையும் அகற்றினால் புற்றுநோயிலிருந்து எளிதில் குணமாகலாம். இதற்கு இயற்கையான சிகிச்சை முறைகளைத்தான் பரிந்துரைக்கிறேன். பழங்கள், காய்கறிகள், கீரைகளை சரியான விகிதத்தில் எடுத்துக்கொள்ள பயிற்சி அளிக்கிறேன்.
அதேபோன்று மனத்துக்கும் தியானம் போன்ற இயற்கை முறை சிகிச்சைகளை கொடுக்கிறேன். இதன்மூலமே புற்றுநோயிலிருந்து நிறைய பேரை மீட்டு எடுத்திருக்கிறேன். காலின் கேம்பல் என்பவர் 40 வருஷமாக புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். ஆராய்ச்சியின் முடிவில் தவறான உணவு பழக்கமே புற்றுநோய்க்கு காரணம் என்று தெரிவித்தார். புற்றுநோய் வருவதற்கு பாலை அதிகளவில் எடுத்துக் கொள்வதும் ஒரு காரணம். பாலில் ‘கேசின்’ என்ற பொருள் புற்றுநோயை உண்டாக்க கூடியதாக இருக்கிறது. வளர்ந்த பிராணிகள் எதுவும் பாலை அருந்துவதில்லை. மனிதன் மட்டுமே பாலை அருந்துகிறான்" என்றவரிடம், "பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட, மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள், பழங்களை சாப்பிடலாமா?" என்ற கேள்விக்கு, "முடிந்தளவு ஆர்கானிக் உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. வேறு வழியில்லையென்றால் மட்டுமே இவற்றை எடுத்துக் கொள்ளலாம்" என்று பதிலளித்தார்.
சர்வதேச தமிழ் தாவர உணவாளர்கள் சங்க நிறுவனர் அசோக்குமார் பேசும்போது, "பார்சிகள் இனத்தில் இறந்த உடலை கழுகுக்காக மலையின் மீது சாப்பிட வைப்பார்கள். சமீப காலங்களில் இறந்த மனிதனின் உடலை சாப்பிட்ட கழுகுகள் இறந்து போய்விடுகிறதாம். அந்தளவுக்கு மனிதனின் உடல் நஞ்சாக மாறியுள்ளது. ஃபாஸ்ட் புட், ஜங்க் புட், அதிகமான அசைவ உணவுகள் என்று நாளுக்கு நாள் நமது உணவு பழக்கம் மாறிக் கொண்டே வருகிறது. நோய்கள் அதிகரிப்பதோடு, வன்முறையும் நாட்டில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிகம் சமைக்கப்பட்ட அரிசி உணவுகளை எடுத்துக் கொள்வது, அளவுக்கதிகமாக உண்பது போன்ற காரணங்களால், உடல் பருமன் நோய் வாட்டி வதைக்கிறது. உடல் பருமன் அனைத்துவிதமான நோய்களுக்கும் காரணமாக இருந்து வருகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு, 30 வயசுக்கு மேல் அரிசி உணவை குறைத்துக்கொள்வது நல்லது. சமைக்கப்படும் உணவு மசாலா, எண்ணெய் ஆகியவை சேர்த்து சமைக்கப்படுகிறது. அரை வயிறு சாப்பிட்டாலே ஆரோக்கியமா வாழலாம்.
அதனால்தான் வன்முறையற்ற உணவு என்ற பெயரை இயற்கையான தாவர உணவுகளுக்கு பெயர் வைத்து அழைக்கிறோம். எங்கள் தாவர உணவாளர்கள் சங்கத்தின் மூலமாக காய்கறிகள், பழங்கள், கீரைகளை சமைக்கப்படாமல் இயற்கையாகவே உண்ணவே பரிந்துரைத்து வருகிறோம். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பொதுமக்களுக்கான கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம். மனிதநேயமிக்க சமூகத்தை உருவாக்கும் நோக்கோடு செயல்பட்டு வருகிறோம். உங்கள் உணவே, உங்களை வெளிப்படுத்தும் மதிப்பீடு. 2012 ஆம் ஆண்டில் 7 லட்சம் பேர் இந்தியாவில் புற்றுநோயால் இறந்துள்ளனர். வளர்ந்து வரும் மோசமான உணவு பழக்கங்களே இதற்கு காரணம்" என்றார்.
இயற்கை
No comments:
Post a Comment