திருவனந்தபுரத்தை சேர்ந்த பாம்பு பிடிப்பதில் பிரபலமான வாவா சுரேஷை பாம்பு கடித்தது. தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்பு பிடிப்பதில் திறமைசாலியான இவர் இதுவரை ஆயிரக்கணக்கான விஷப் பாம்புகளையும், 30க்கும் மேற்பட்ட ராஜ நாகங்களையும் பிடித்துள்ளார். வீடுகள், அலுவலகங்கள் மறறும் குடியிருப்புகளில் பாம்புகள் வந்தால் தனது பைக்கில் அங்கு சென்று பாம்பை பிடித்து காட்டுக்குள் விட்டு விடுவார். இதற்காக இவர் யாரிடமும் பணம் வாங்குவது இல்லை.
வனத்துறையில் இவருக்கு வேலை கொடுக்கவும் கேரள அரசு முன் வந்தது. ஆனால் அதை ஏற்க அவர் மறுத்து விட்டார். இதுவரை 250க்கும் மேற்பட்ட விஷப் பாம்புகள் அவரை கடித்துள்ளன. 9 முறை மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளார். இந்த நிலையில் திருவனந்தபுரம் பூஜப்புராவில் வீடொன்றில் புகுந்த நல்லபாம்பைப் பிடிக்கச் சென்றார் வாவா சுரேஷ். அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பாம்பு அவரது கையில் கடித்தது. இருப்பினும் அவர் பாம்பை விடாமல் பிடித்து சாக்கு பையில் போட்டார். பாம்பு கடித்ததால் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த அவர் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் இன்னும் ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment