ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு சாப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அப்பீல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள்: சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பு லாஜிக் இல்லாதது. குழப்பம் நிறைந்தது. ஹைகோர்ட்டின் உத்தரவால், நீதி நிலைகுலைந்து போயுள்ளது. தப்பான ஒரு கணித கூட்டலை அடிப்படையாக வைத்து ஜெயலலிதா மற்றும் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா சொத்துக்களின் கட்டுமான செலவையும், அவரது வளர்ப்பு மகன் திருமணச் செலவையும் ஹைகோர்ட் தவறுதலாக கணக்கிட்டுள்ளது. காவல்காரர்களுக்கு போடப்படும் ஷெட்டுக்கு என்ன மதிப்பு கணக்கிடப்பட்டதோ அதே மதிப்பை, பிரமாண்டமான பங்களாக்களுக்கும், அடுக்குமாடிகளுக்கும் கணக்கிட்டுள்ளது ஹைகோர்ட். கீழ்நீதிமன்றத்தின் ஒரு உத்தரவை முற்றாக மறுத்து தீர்ப்பு எழுதிய ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி, தனது தீர்ப்பை நியாயப்படுத்தும் வலுவான காரணம் எதையுமே கூறவில்லை. அதேநேரம், கீழ்நீதிமன்றமோ, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள்தான் என்பதை ஆதாரத்துடனும், முழு விவரத்துடனும் கூறியிருந்தது. ஹைகோர்ட் கூட்டலில் பெரும் தவறிழைத்துவிட்டது. கடன் தொகையை தப்பாக கூட்டி 24,17,31,274 ரூபாய் என்று கணக்கு காட்டியுள்ளது ஹைகோர்ட். ஆனால், சரியாக கூட்டினால் 10,67,31,274 ரூபாய்தான் வருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய இந்த தப்பான கூட்டல் பயன்பட்டுள்ளது.
தப்பான கூட்டல் மூலம், ஜெயலலிதா 8.12 சதவீதம்தான் அதிகமாக சொத்து குவித்துள்ளதாகவும், இதனால் விடுதலை செய்வதாகவும் ஹைகோர்ட் கூறியுள்ளது. ஆனால், அதே தொகையை சரியாக கூட்டினால் அது 76.7 சதவீதமாக அதிகரித்துவிடும். ஹைகோர்ட் நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதாட வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்தார். ஆனால் அரசு தரப்பான கர்நாடக தரப்பை வழக்கில் சேர்க்கவேயில்லை. இறுதியில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஒருநாள் மட்டுமே கர்நாடகாவுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. அதுவும்கூட எழுத்துப்பூர்வமாக மட்டுமே. அக்னிகோத்ரி என்பவர் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததை உதாரணமாக காண்பித்து, ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதும் தவறானது. ஏனெனில், இந்த வழக்கில், குற்றச்சாட்டு பல கோடி சொத்துக்கள் தொடர்பானது. அக்னிகோத்ரி வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர், வருவாய்க்கு அதிகமாக 11 ஆயிரத்து 350 ரூபாய் சேர்த்திருந்தார். அதை கணக்கு காட்ட முடியாமல் திணறியதால் கோர்ட் அவரை விடுவித்தது. ஆனால் ஜெயலலிதா வழக்கிலோ, சொத்து மதிப்பு கோடிக்கணக்கிலானது.
No comments:
Post a Comment