சோலார் பேனல் மோசடி வழக்கில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கும் தொடர்பு உண்டு என்றும், அவர்களது பெயர்களை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் என்றும் சரிதா நாயர் புது குண்டு வீசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் செங்கணூரை சேர்ந்தவர் சரிதாநாயர். இவரும் முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணனும் சேர்ந்து கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரை ஏமாற்றி கோடி கணக்கில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இந்த வழக்கில் சரிதாநாயர், அவரது முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கேரளா மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில் பத்தனம்திட்டா மாவட்டம் ஆறான்முளாவை சேர்ந்த பாபுராஜ் என்பவர் பத்தனம்திட்டா போலீசில், சரிதாநாயர் நடத்தி வந்த சோலார் பேனல் நிறுவனத்தின் பங்குகளை தனக்கு தருவதாக கூறி 1கோடியே19 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் கூறினார். இந்த வழக்கு விசாரணை பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயகிருஷ்ணன், குற்றம் சாட்டப்பட்ட சரிதாநாயர் மற்றும் பிஜூ ராதாகிருஷ்ணனுக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் சரிதா நாயருக்கு ரூ.45 லட்சமும், பிஜூ ராதாகிருஷ்ணனுக்கு ரூ.75 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், பெருந்தலமன்னா நீதிமன்றத்தில் நடந்த மற்றொரு மோசடி வழக்கில் சரிதாநாயர் ஆஜராக நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சோலார் பேனல் வழக்கில் பல அரசியல் பிரமுகர்கள் எனக்கு உதவுவதாக கூறினர். ஆனால் என் மீது தொடரப்பட்ட வழக்குகளில் யாரும் எனக்கு உதவவில்லை. மற்ற சில விசயங்களில்தான் எனக்கு அவர்கள் உதவினார்கள்.
சோலார் பேனல் ஊழல் வழக்கில் நிதியமைச்சர் கே.எம்.மாணியின் மகன் ஜோஸ் கே.மாணி தவிர மேலும் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உண்டு. ஆளும் காங்கிரஸ் கட்சியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு இந்த மோசடியில் பங்கு உண்டு. சோலார் ஊழல் வழக்கில் சோலார் பேனல் ஊழல் வழக்கில் நிதியமைச்சர் கே.எம்.மாணியின் மகன் ஜோஸ் கே.மாணி தவிர மேலும் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உண்டு. அனைவரின் பெயர்களையும் நான் 3 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தெரிவிப்பேன். ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் புகாரில் இருந்து தப்பி விடலாம் என்று அவர்கள் கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. மோசடியில் தொடர்புடையவர்கள் குறித்த முக்கிய ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. உரிய நேரத்தில் அதனை ஒவ்வொன்றாக வெளியிடுவேன்" என்றும் சரிதா நாயர் கூறியுள்ளார். ஏற்கனவே கேரளாவைச் சேர்ந்த அமைச்சர் மாணியின் மகன் மீதும் , எம்.எல்.ஏக்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் சரிதா நாயர். தற்போது சோலார் மோசடி வழக்கில் தொடர்புடையவர்களின் பெயரை ஆதாரத்துடன் வெளியிடுவேன் என்று கூறி புது வெடிகுண்டு ஒன்றினை வீசியுள்ளது கேரளா அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment