ஆணவமே சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும்- அதிகாரத்தில் இருப்பவர்கள் அடக்கமாக இருக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கூறியிருப்பது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவில் அவசர நிலை மீண்டும் வராது என்று கூற முடியாது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றிக்கு அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் நரேந்திர மோடியை மனதில் வைத்துத்தான் அத்வானி அந்த கருத்தை தெரிவித்ததாக கூறப்பட்டது. ஆனால் தாம் யாரையும் குறி வைத்து அப்படி கூறவில்லை என அத்வானி விளக்கம் அளித்திருந்தார். அந்த விளக்கத்திலும் கூட மோடியையே மறைமுகமாக அத்வானி சாடியிருப்பதாக புது சர்ச்சை கிளம்பியுள்ளது.
அத்வானியின் புதிய சர்ச்சை பேட்டி:
அவசர நிலை மீண்டும் வராது என்று கூற முடியாது என்று நான் தெரிவித்த கருத்து, எந்த தனிநபரையும் குறிவைத்து கூறப்பட்டது அல்ல. காங்கிரஸ் கட்சியை மனதில் வைத்துதான் அந்த கருத்தை தெரிவித்தேன். அவசர நிலையை அமல்படுத்தியதற்காக அந்த கட்சி இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் தலைமை அவசர நிலைக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் எல்லாவகையான சர்வாதிகாரத்தையும் எதிர்க்கிறேன். ஆணவம்தான் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கிறது. இன்றைய தலைவர்கள், வாஜ்பாய் மாதிரி அடக்கமானவர்களாக திகழ வேண்டும். பணம் சம்பாதிப்பவர்கள், அதை இழக்க விரும்பாததைப் போலவே, பதவிக்கு வருபவர்களும் அதை இழக்க விரும்புவது இல்லை. அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு வாக்காளர்கள் பாடம் புகட்டுவார்கள். ஜனநாயகத்தை பாதுகாக்க இப்போதைய தேவை அரசியல்சட்ட பாதுகாப்பு அம்சங்கள் அல்ல. பதவியில் இருப்பவர்களின் அரசியல் உறுதிப்பாடுதான். அது இல்லாததுதான் கவலை அளிக்கிறது. இவ்வாறு அத்வானி கூறியுள்ளார். அத்வானியின் இந்த அறிவுரையும் எச்சரிக்கையும் மோடியை மனதில் வைத்துதான் கூறப்பட்டதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
No comments:
Post a Comment