Latest News

இங்கும் வருமா இ-மணல்?


இன்றைய காலகட்டத்தில் ‘மண்ணாய்ப் போ’ என்றால் அது ஒரு வசை அல்ல; பொன்னாய்ப் போ என்றே அதன் பொருள் எனக் கொள்ளலாம். அந்த அளவுக்குப் பொன்னைப் போல் மண்ணுக்கு மவுசு கூடியிருக்கிறது. நகைக் கொள்ளை மாதிரி மணல் கொள்ளை என்ற சொல்லும் மிகவும் பழக்கமான பத்திரிகைச் சொல்லாகிவிட்டதில் இருந்து இதைப் புரிந்துகொள்ள முடியும். இதற்குக் காரணம் கட்டிடம் கட்ட ஒரு முக்கியமான பகுதிப் பொருளாக மண் இருப்பதே.

அரசு குவாரி நன்மையா?

ஆற்று மணல் அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தில் உள்ள பொருள் அல்ல. ஆனால் அதில் கிடைக்கும் அளவில்லாத லாபத்தால் கணக்கு வழக்கு இல்லாமல் ஆற்று மணல் சுரண்டப்பட்டது. இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருந்தது. கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணு போன்ற பலரின் முயற்சியின் காரணமாகத் தமிழ்நாட்டில் நிலவிவந்த மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்தவும் தொடங்கியது. விதிமுறையை மீறி ராட்சத இயந்திரங்கள் கொண்டு அள்ளுவதற்குத் தடை வந்தது. அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்துவதால் மணலைத் தேக்கிவைத்து போலித் தட்டுப்பாடுகளை உருவாக்கி ஆற்றை மட்டுமல்லாது வாங்குபவர்களையும் சுரண்டும் வழக்கம் ஒழிந்தது.

இன்றைக்கு ஆற்று மணலுக்கு மாற்றாகப் பலவிதமாகத் தயாரிக்கப்படும் மணல்களும் பயன்பட்டுக்கு வந்துள்ளன. ஆனால் தட்டுப்பாடும் சுரண்டலும் நின்றிருக்கிறதா என்றால் அது பெரும் கேள்விதான். ஆற்று மணல் அரசின் குவாரிகளில் இருந்து நேரடியாகப் பயனாளிகளுக்குச் சென்று சேரவில்லை. அதற்கிடையிலும் பலவிதமான தரகு நிலைகள் இருக்கின்றன. அரசிடம் இருந்து வாங்கப்படும் மணல் நம் கைகளில் கிடைக்கும்போது அதன் விலை பன்மடங்காக இருக்கிறது.

இரண்டு மூன்று மடங்கு அதிகமாக மணலுக்குக் கட்டணம் செலுத்த வேண்டிய சூழலும் உள்ளது. போலியாக உருவாக்கப்படும் தட்டுப்பாடுகளும் இருக்கின்றன. இதனால் கட்டுமான விலையும் அதிகமாகிறது. அரசின் திட்டம் மக்களுக்குப் போய்ச் சேருவதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்தச் சிக்கலைத் தீர்ப்பது ஒரு சவாலான காரியம்தான்.

அத்தியாவசியப் பொருளாகுமா மணல்?

மணல் வாங்குவதில் உள்ள இந்தச் சிக்கல்களைக் களைய பலவிதமான யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆற்று மணலை அத்தியாவசியப் பொருளாக மாற்றிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஏற்கனவே அகில இந்தியக் கட்டுநர் சங்கம் சிமெண்டை இது போல அத்தியாவசியப் பொருளாக அறிவிக்கச் சொல்லி கோரிக்கை வைத்திருந்தது என அதன் கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் ரஜீஸ்குமார் தெரிவிக்கிறார். “இப்போது ஆற்று மணலையும் அத்தியாவசியப் பொருளாக அறிவிக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது” என்கிறார் அவர்.

பஞ்சாப் மாநில அரசும் ஆந்திரா அரசும் ஆற்று மணலை அத்தியாவசியப் பொருளாக அங்கீகரித்துள்ளன. ஆற்று மணலை அத்தியாவசியப் பொருளாக அறிவித்தால் அதன் விலையை அரசு கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆற்று மணல் மூலம் நடக்கும் கொள்ளைகளைத் தடுக்க முடியும் என அத்துறைசார்ந்தவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

இணைய விற்பனையில் மணல்

மணல் வாங்குவதில் உள்ள இந்தத் தரகு நிலைகளைச் சமாளிக்க மற்றுமொரு வழிமுறை, அதை இணையம் மூலம் விற்பது. “அரசு நிர்ணயிக்கும் விலை மிகக் குறைவாகத்தான் உள்ளது. ஆனால் நம் கையில் வந்து கிடைக்கும்போது அதன் விலை மிக அதிகமாக இருக்கிறது” என்கிறார் கோயம்புத்தூர் கட்டுமானப் பொறியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆத்தியப்பன்.

“இரண்டு யூனிட் மணலின் விலை 620 ரூபாய். ஆனால் தரகு எல்லாம் சேர்ந்து நமக்கு 4,500 ரூபாய்க்குக் கிடைக்கிறது” என்கிறார் அவர். இதனால் இணைய மூலம் அரசே ஆற்று மணலை நேரடியாக விற்பனை செய்தால் அதன் பலனை மக்கள் நேரடியாக அடைய முடியும் என ஆத்தியப்பன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

ஏற்கனவே தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா மாநிலங்களில் ஆற்று மணலை இணையம் மூலம் விற்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆற்று மணலைக் கையாள்வதில் புதிய கொள்கைகளை அரசு அறிவிக்க வேண்டியது இப்போது அவசியம். இணையம் மூலம் ஆற்று மணல் விற்பனையும் அவற்றுள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.