கங்கை நதியை முழுமையாக சுத்தப்படுத்த ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் தேவைப்படும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலை கழிவுகள், சாக்கடை, திட கழிவு பொருட்கள் பெருமளவில் கலப்பதால் கங்கை நதி தொடர்ந்து மாசடைந்து வருகிறது. எனவே கங்கையை சுத்தப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்காக இந்தியா தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு (இது இந்தியாவில் உள்ள 7 ஐஐடி-க்களின் கூட்டமைப்பாகும்), கங்கை நதிக்கரை மேலாண்மை திட்டம் 2015-ஐ வடிவமைத்துள்ளது. இதன்படி கங்கை நதிக்கரையை இரு புறத்தில் உள்ள கழிவுகளை முழுமையாக அகற்றுவது, நதியை முழுமையாக தூய்மைப்படுத்துவது ஆகிய பணிகளுக்கு ரு.6 லட்சம் கோடி முதல் 7 லட்சம் கோடி வரை தேவைப்படும் என்று கணித்துள்ளது.
கங்கையை சுத்தப்படுத்துவதற்கான அடிப்படை திட்டத்தை பல்வேறு தேசிய, சர்வதேச ஆய்வாளர்களின் உதவியுடன் கான்பூர் ஐஐடி-யின் பேராசிரியர் வினோத் தாரே ஒருங்கிணைத்து வடிவமைத்துள்ளார்.
கங்கை மாசடைவதற்கான முக்கிய காரணங்களையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கங்கையை சுத்தப்படுத்துவதற்கு தீவிரமான முயற்சி தேவை. முக்கியமாக நதிக்கரையில் உள்ள நகரங்களிலும் நகர்ப்புற நதி மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நதியின் இரு புறங்களில் இருந்தும் தொழிற்சாலை கழிவுகள், சாக்கடை கலப்பது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்பும் அவசியம் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment