Latest News

தமிழக ப்ளஸ் டூ தேர்வில் துபாய் இடம்பெற்றது எப்படி? பள்ளிக் கல்வித் துறையின் விளக்கம் இது!


இன்று ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளை வெளியிட்ட அரசுத் தேர்வுத் துறை, செய்தியாளர்களுக்கு வழங்கிய அறிக்கையில், மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதத்தைக் குறிப்பிட்டிருந்தது. அதில் துபாய் தேர்ச்சி விகிதம் 95 சதவீதம் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதை அப்படியே நாளிதழ்களின் இணையதளங்களில் செய்தியாகவும் வெளியிட்டுவிட்டார்கள்.

ஆனால் இது தவறுதலாக வந்துவிட்டதோ என்ற சந்தேகத்தில் சமூக இணையதளங்களில் இந்த செய்தி கிண்டலடிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்த விளக்கத்தைத் தந்துள்ளது தேர்வுத் துறை. தேர்வுத் துறை அலுவலர் ராஜேஸ்வரி இதுகுறித்துக் கூறுகையில், "துபாய்க்கு போய் செட்டில் ஆகும் தமிழர்கள் பலரும் நம் தமிழ்நாட்டு பாடத்திட்டத்தைப் பின்பற்றி தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். துபாயில் ‘கிரசண்ட் ' என்ற தனியார் பள்ளி ஒன்று அங்குள்ள தமிழர்களால் நடத்தப்படுகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு வரை கிரசண்ட் பள்ளி உயர்நிலைப்பள்ளியாக இருந்து வந்தது. இப்போது மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே அங்கு படிக்கும் தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வை ஆண்டு தோறும் அரசுத்தேர்வுத்துறை மூலம் எழுதுகிறார்கள். இங்கே எப்படி தமிழகம் தவிர பாண்டிச்சேரிக்கும் நாம் தேர்வு நடத்துகிறோமோ, அதே மாதிரிதான் துபாய் பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு நடத்துகிறோம். துபாயில் பள்ளி தொடங்கியதுமே நமது ஆங்கிலம் மீடியம் பாட நூல்களை கூரியர் மூலம் அனுப்பி வைத்து விடுவோம். அதே நேரம் அந்தப் பள்ளியில் ஆர்ட்ஸ் குரூப் படிப்புக்கு மட்டுமே அனுமதி. அறிவியல் பாடத்திட்டத்தில் பிராக்டிகல் தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் இருப்பதால், அனுமதி கிடையாது. கணக்கு, வரலாறு, வணிகவியல் பாடத்திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி. பொதுத்தேர்வு எழுத துபாயில் இருந்து பள்ளி மூலம் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள். இங்கிருந்து ஹால் டிக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்படும். பிறகு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள்களை இந்திய தூதரகத்திற்கு கூரியர் மூலம் அனுப்பி வைப்போம். தமிழகத்தில் தேர்வு தொடங்கும் அதே நாளில் இந்திய தூதரகக் கண்காணிப்பாளர் கண்காணிப்பில் தேர்வுகள் நடக்கும். விடைத்தாள்களை இந்திய தூதரக அதிகாரிகள் தமிழக அரசு தேர்வுத்துறைக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை துபாய் கிரசண்ட் பள்ளி மூலம் 20 மாணவர்கள் எழுதினர். அதில் 19 பேர் தேர்ச்சி பெற்றார்கள். ஒருவர் தோல்வி அடைந்து விட்டார். அதனால்தான் தேர்ச்சி விகிதம் 95 சதவீதம். கல்வித் துறையைப் பொருத்தவரை, துபாயும் ஒரு மாவட்டம். இந்திய தூதரகம் மூலம் அந்த மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் அனுப்பி வைக்கப்படும்," என்றார் அவர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.