தந்தையை இழந்த சோகத்திலும் நன்றாக படித்து, பிளஸ் 2 தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் மாணவி சௌமியா. மறைந்த தனது தந்தையின் கனவை நிறைவேற்ற கடுமையாக உழைத்து படித்ததாக உருக்கமுடன் கூறியுள்ளார். 1169 மதிப்பெண் பெற்றுள்ள இந்த மாணவி சி.ஏ. படித்து ஆடிட்டர் ஆவதே தனது லட்சியம் என்று கூறியுள்ளார். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதலிடம் பிடித்த சௌமியா சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை செந்தில்நாதன். தனியார் நிறுவன ஊழியர். தாயார் ஆண்டாள். இவர்களுக்கு சௌமியா ஒரே மகள். சௌமியா சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைபள்ளியில் படித்து வருகிறார். இந்த பள்ளி ஆண்டுதோறும் தேர்ச்சியில் சிறப்பான இடத்தை பெறும். இந்த ஆண்டும் சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றது. சிறு வயதிலிருந்தே நன்றாக படிக்கும் சௌமியா நல்ல மதிப்பெண்கள் பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். அவரது தந்தை செந்தில்நாதனும் தனது சொற்ப வருமானத்தில் ஊக்கம் கொடுத்து படிக்க வைத்து வந்தார். நன்றாக படிக்க வேண்டும் என்று மகளுக்கு ஊக்கம் கொடுத்து வந்த தந்தை, பொதுத்தேர்வு நடக்க இருந்த நேரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென மறைந்தார்.
தந்தையை இழந்த சோகம்
தந்தை மறைந்தாலும் அவரது கனவை நிறைவேற்ற தேர்வு நேரம் என்ற போதிலும் துக்கத்தை தாங்கிக் கொண்டு கடுமையாக படித்து நல்ல மதிப்பெண் எடுத்தேன் என்று மாணவி சௌமியா கூறியுள்ளார்.
உதவ முன்வருவார்களா?
தற்போது பிகாம் படித்து சிஏ படிக்க விரும்பும் சௌமியாவுக்கு கல்லூரியில் படிக்க வைக்க பணம் இல்லை. யாராவது உதவினால் நன்றியுடைவர்களாக இருப்போம் என்று அவரது தாய் ஆண்டாள் தெரிவித்தார்.
ஆடிட்டர் ஆவதே லட்சியம்
இதேபோல் இரண்டாம் இடத்தை பிடித்த சர்மிளா, பெரம்பூர் மார்க்கெட் பள்ளியில் பயின்றவர், இவர், 1156 மதிப்பெண் பெற்றார். மூன்றாம் இடத்தை பெற்ற திவ்யா 1155 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர்களது குடும்பமும் வறுமையில் வாடும் குடும்பமாகும். மூவருமே சிஏ படிப்பது தங்களது லட்சியம் என தெரிவித்தனர்.
ரிப்பன் மாளிகையில்
மாநகராட்சி பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியர்க்கு மேயர் பரிசளித்து பாராட்டு தெரிவிப்பது வழக்கம். இந்த ஆண்டு மேயர் பரிசு கொடுக்க முன்வராவிட்டாலும் செய்தியாளர்கள் கேட்டுக்கொண்டதால் மாணவிகளை ரிப்பன் மாளிகைக்கு அழைத்து வந்தனர்.
No comments:
Post a Comment