Latest News

பிளஸ் 2 தேர்வு முடிவு: 6 மாணவ–மாணவிகள் தற்கொலை


பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்ததாலும், குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாலும் தமிழகத்தின் பல பகுதிகளில் 6 மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிளஸ் 2 எனப்படும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளின் புகைப்படங்களும், பேட்டிகளும் வெளியாகியுள்ள அதே நாளிதழ்களில்தான் தேர்வு தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவ, மாணவியர்களைப் பற்றிய தகவலும் புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது.

தேர்வில் தோல்வி 

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகன் ரகு (18) தேர்வில் தோல்வி காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடியாத்தம் மூங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் குணசேகரன் (17) தோல்வி காரணமாக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி தற்கொலை 

சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு, 9வது குறுக்குதெருவில் வசித்து வருபவர் கரிகாலன். கட்டிட தொழிலாளி. இவருடைய மகள் இலக்கியா (வயது 17) சென்னை அடையாறில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் பிளஸ்2 படித்து தேர்வு எழுதியிருந்தார். இலக்கியா 744 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். மதிபெண் குறைந்து போனதால் மனமுடைந்த இலக்கியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தீக்குளித்து தற்கொலை 

ஈரோட்டை சேர்ந்த காளிதாஸ் என்பவரின் மகள் மஞ்சுளா தேர்வில் வெற்றி பெற்றாலும், குறைந்த மதிப்பெண் எடுத்துவிட்டோமே என்ற வேதனையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ரிசல்டுக்கு முன்பே 

தேனி மாவட்டம் கண்டமனூரை சேர்ந்த அன்னக்கொடி என்பவரின் மகன் அஜய் (16) பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு பயந்து புதன்கிழமையன்றே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால் நேற்று வெளியான தேர்வு முடிவில் அவர் தேர்ச்சி பெற்று இருந்தார்.

தூக்கு போட்டு தற்கொலை 

கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகள் ஆனந்தி தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைகள் ஏன்? 

பிளஸ் 2 தேர்வுதான் தங்களுடைய வாழ்க்கையை நிர்ணயிக்க கூடியதாக இருக்கிறது என்று கருதும் மாணவர்கள் இத்தகைய சோக முடிவினை எடுக்கின்றனர் என்பதுதான் பரிதாபம். மாணவர்களின் தற்கொலையை தடுக்க எத்தனையோ நடவடிக்கைகள் அரசு எடுத்தாலும் கேலி, கிண்டலுக்கு பயந்து விலை மதிக்க முடியாத உயிரை மாய்த்துக்கொண்டு விடுகின்றனர் என்பதுதான் சோகம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.