இந்தியாவில் இனி ஆதார் எண்ணைப் பயன்படுத்தி பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கின்றவர்களுக்கு அதன் மூலமாகவே அனைத்து பரிசோதனைகளும் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு கீழ் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் மட்டும் செயல்படுத்திவந்த இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வெளியுறவுத்துறை முடிவு செய்துள்ளது.
டெல்லியில் இந்த முறையை அமல்படுத்தும்போது ஏற்பட்ட குளறுபடிகள் சரி செய்யப்பட்டு நாடு முழுவதும் 37 பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு கீழ் உள்ள அனைத்து பாஸ்போர்ட் சேவா கேந்திராக்களில் பாஸ்போர்ட்-ஆதார் இணைந்த பரிசோதனை திட்டம் செயல்பாட்டிற்கு வரும். முகவரியை உறுதிப்படுத்தும் சான்றாக மட்டுமே தற்போது பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல் இணைக்கப்படுகிறது. இதில் ஆதார் கார்டில் உள்ள விபரங்கள் மட்டுமே விண்ணப்பத்துடன் ஒத்துப்போகிறதா என்று இப்போது ஆய்வு செய்யப்படுகிறது.
இனி பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் விண்ணப்பதாரர் தனது விரல் ரேகையை பதிவு செய்யும் போது அது யூனிக் ஐடென்டிபிகேஷன் அதாரிட்டி ஆப் இந்தியா எனப்படும் ஆதார் மைய சர்வருடன் இணைக்கப்படும். அப்போது ஆதார் டேட்டா பேசில் உள்ள விபரங்கள் உடனே கணினி திரையில் தெரியும். விண்ணப்பதாரரின் புகைப்படம், விரல் ரேகைகள் மற்றும் ஆதார் எண் எடுக்கும் போது வழங்கப்பட்ட அனைத்து விபரங்களும் பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் ஒருவர் அளித்துள்ள விபரங்களுடன் ஒத்துப்போகிறதா என்பது சரிபார்க்கப்படும். பாஸ்போர்ட் பெறுவோர் ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற பல்வேறு தவறுகளை தடுக்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதே வேளையில் ஆதார் இருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் எடுக்க முடியும் என்ற கட்டாயம் இல்லை.
எனினும், ஆதார் வைத்துள்ளவர்களின் விபரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஆதார் இல்லாதவர்கள் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்ட், பேங்க் பாஸ்புக், டெலிபோன் பில் உள்ளிட்ட ஆவணங்களையும் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment